தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும்: நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாகப் பணியாற்றுவது அவசியம் என்று நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நிதிஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடந்து வருகிறது. அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் முதல்முறையாக லடாக் யூனியன் பிரதேசமும் பங்கேற்கிறது.
இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்கப்போவதாகத் தகவல்வெளியான நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் பங்கேற்கவில்லை.

நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாக பணியாற்றுவது அவசியம். காலம் கடந்த சட்டங்கள் நீக்கப்பட்டு, எளிதாகத் தொழில் செய்வதற்கு வாய்ப்புகளை வழங்கிட வேண்டும்.

தற்சார்பு இந்தியா திட்டத்தில், தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளித்து ஓர் அங்கமாக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் துறையின் பங்களிப்பை அரசு மதிக்க வேண்டும்.

இந்திய வளர்ச்சியின் அடித்தளமே மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து பணியாற்றுவதுதான். குறிப்பிட்ட இலக்கை நோக்கி, பணியாற்றி கூட்டுறவு கூட்டாட்சியை இன்னும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், கூட்டுறவு கூட்டாட்சியை போட்டித்தன்மையுள்ளதாக மாற்ற முயன்று, மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்லாது மாவட்டங்களிடையேயும் கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து பணியாற்றுவதைப் பார்த்தோம். கரோனாவை வென்று, உலகின் முன் இந்தியாவைப் பெருமைப்படுத்தினோம். இந்த ஆண்டு நாம் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடப்போகிறோம். ஆதலால், இந்த நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் முக்கியமானது.

கடந்த சில ஆண்டுகளாகப் பார்க்கிறோம் மக்களுக்கு அதிகமான வங்கிக்கணக்குகள் வழங்கப்பட்டுள்ளன, தடுப்பூசி போடும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, சுகாதார வசதி, இலவச மின்சார இணைப்பு, இலவச சமையல் சிலிண்டர் இணைப்பு போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளது