‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

‘நீ இருக்க பயமேன்’.
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.. மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்..
மிகக் கனிந்த, வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது, அவனது பாரம் தாங்காமல் அக்கிளை முறிந்து விட்டது..
சட்டென்று சுதாரித்த, அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்தான்..
குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு.. “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான்.. உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது..
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார்.. மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.. அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.. கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது.. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்..
பெரியவர் பதில் பேசாமல், மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.. மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு.. “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்..” என்று எச்சரித்தான்..

சொக்கலிங்கம் அருணாச்சலம்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.. இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.. விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.. அவரை சரமாரியாகத் திட்டினான்.. “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்..?” என்றான்..
பெரியவர் அமைதியாக, சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்..” என்றார்..
இளைஞன் திருதிருவென முழித்தான்..
பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.. உன் மூளை வேலை செய்யவில்லை.. நான் கல்லை விட்டு எறிந்ததும், பயம் மறைய ஆரம்பித்து.. நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.. யோசிக்க ஆரம்பித்தவுடன், நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.. உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்..” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்..
பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.

நன்றி

சொக்கலிங்கம் அருணாச்சலம்.
முகநுால் பதிவிலிருந்து