புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து அரசு அறிவிப்பு…

புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என்ற நடைமுறையை இன்று முதல் புதுச்சேரி அரசு கொண்டுவந்துள்ளது.

பொதுமக்கள் வெளியூர், வெளிமாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி என்பது சின்னஞ்சிறு மாநிலம். எனவே புதுச்சேரியை மாவட்ட வாரியாக பிரிக்க முடியாது. புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லவேண்டும் எனில் தமிழகத்தை கடந்து செல்ல வேண்டும்.

ஆகவே காரைக்காலுக்கு செல்ல வேண்டும் எனில் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் புதுச்சேரியில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் போது,

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின்படி தற்போது இந்த இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதலே இ-பாஸ் பெரும் வெப்சைட் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு எந்தவொரு பதிலும் தராததால் இ-பாஸ்முறை நடைமுறையில் உள்ளதா இல்லையா என்ற ஒரு குழப்பமான சூழ்நிலையே நிலவி வந்தது.

இந்நிலையிலேயே இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, மத்திய அரசு உத்தரவுப்படி இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.