புத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி

 

ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்

 

நம் பாரம்பரிய வாழ்வியலை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம்மிடையே  அதிக அளவில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் இல்லை. நாம் பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவைத்தான் சாப்பிட்டோம். ஆனால் இன்று வீட்டில் சமைத்த உணவுகள் பிடிக்கவில்லை என்று விதவிதமான வெளி உணவுகளை எடுத்துக்கொள்கிறோம்.

 

இன்றைய உணவுப் பழக்கங்கள் கார்ப்பரேட் கையில் என்றளவில் உள்ளது. மக்கள் விதவிதமான உணவிற்காக எவ்வளவு தூரம், நேரம், பணம் செலவு செய்யவும் தயாராக உள்ளனர் என்பது பொருளாதார வளர்ச்சியா நம் வாழ்வியல் வீழ்ச்சியா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டிய நிர்பந்தந்தில் இருக்கிறோம். வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என்பது நோயை விலை கொடுத்து வாங்கும் என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது.

 

ஆசைக்கு விதவிதமான உணவுகளை எப்போதாவது உண்பது தவறல்ல. அதையே தினமும் ஒவ்வொரு வேளையும் என்பது ஏற்புடையதல்ல. இப்போது இரண்டு விஷயங்கள் அல்லது உடல்நலப் பிரச்சனைகள் நம்மை மிகவும் அச்சுறுத்துகின்றன. ஒன்று அதிக எடை. இரண்டாவது நீரிழிவு நோய். இந்த இரண்டிற்கும் அடிப்படை கவனமில்லாத உணவு மற்றும் வாழ்வியல் முறைகள்தான். உணவுதான் உடலை உயிரை வளர்க்கிறது என்றால், அந்த உணவு எத்தகையதாக இருக்கவேண்டும் என்று பார்ப்போம்.

 

நாம் வசிக்கும் தட்பவெப்பச் சூழ்நிலையில் விளையக்கூடிய உணவே நம் உடலுக்கேற்ற உணவு. இயற்கையின் அற்புதத்தை நம்மால் எளிதாக புரிந்துகொள்ளமுடியும்.  ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற காய்கறிகள், பழங்கள், தானியங்கள் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இப்போது இந்த கார்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய சில பழங்கள், காய்கறிகள் பற்றியும் அவை எவ்வாறு நம் உடல் ஆரோக்கியம்  மற்றும் வாழ்வியலில்  இணைந்துள்ளது  என்றும்  பார்ப்போம்.

 

இந்த பருவத்தில் மிக அதிகமாக கிடைக்கக்கூடிய நம் நாட்டில் விளையக்கூடிய  பழம். ஆனால் மக்களின் தவறான புரிதலால் இதை சாப்பிட்டால் சளி பிடித்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு ஒப்புக்கொள்ளாது என்று ஒதுக்கிவைக்கப்படும் ஒரு பழம். அதுதான் கமலா ஆரஞ்சுப் பழம். சிறு புளிப்பும் இனிப்பும் கலந்த சாறுமிக்க பழம். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதன் நிறமும் மணமும் அலாதியான புத்துணர்ச்சி அளிக்கும்.

இந்தப் பழத்தை நன்கு கவனித்துப்பார்த்தால் நம் வாழ்வியலுடன் இணைந்துள்ள தத்துவம் புரியும். ஆம்… மேல் தோல் வண்ணமயமாக சிறிது கடினம்போல் தோன்றினாலும் எளிதாக பிரமிக்கத்தக்க நெகிழக்கூடிய இந்த உடலைக் குறிக்கிறது. அதாவது நாம் நினைத்தால் நம் உடல் மனம் உயிர் என்ற மூன்றையும் இறுக பிணைத்தோ விலக்கியோ  வைக்கமுடியும்  என்று  உணர்த்துகிறது.

 

உள்ளிருக்கும் வெண்மை நிற நார் போன்ற மென்தோல் நம் மனதைக் குறிக்கிறது. உடல் மற்றும் மனம் சுத்திகரிக்கப்பட்டால் உயிர் எனும் சுவை மிகுந்த பழம் மீண்டும் உயிர் வளர்ச்சிக்கு வித்தாகும் என்பதை உணர்த்தும். இந்த பழத்தை இந்த பருவத்தில் அதிகம் உட்கொள்வதன் மூலம் உடல் உறுதியாகும். அடுத்துவரும் குளிர்காலத்தில் தோல் வறட்சி தவிர்க்க முடியும்.அதனால் ஏற்படும் நிறமாற்றங்கள் தவிர்க்கலாம். 

 

நுரையீரலின் செயல்பாட்டை நன்கு ஊக்குவிக்கும். அதனால் சளி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவை தடுக்கப்படும். மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சக்தி தரக்கூடியது. குழந்தைகளுக்கு மிக அற்புதமான நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடியது. உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. இந்த சாறுடன் தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து பருக சளி கரைந்து வெளியேறும். உடலின் தேவையற்ற கொழுப்பு மற்றும் நீர்தேங்குதலை நீக்கி ஆரோக்கிய அழகு தரவல்லது . 

 

இந்த அத்தனை பயன்களும் நம் நாட்டில் விளையக்கூடிய கமலா ஆரஞ்சு பழத்தில் மட்டுமே உள்ளது. நம் மண்ணில் விளைந்த உணவை உட்கொள்வோம். விவசாயத்திற்கு கைக்கொடுப்போம்.

 

தொடரும்