முக்கிய செய்திகள்

பருவமழையில் 50% பெய்தாச்சு: அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை இருக்குமாம்!

 

தமிழக வடக்ககு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2 நாட்களுக்கும் மிதமான மழையே பெய்ய வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் இயல்பு அளவு 44 செ.மீ ஆகும். இந்தாண்டு பருவம் தொடங்கிய முதலே அதிக மழை பெய்ததால் ஒன்றரை மாதத்தில் 50 சதவீதம் இயல்பு அளவை எட்டியுள்ளது. அதன்படி, இதுவரை சுமார் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கியது. நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அச்சுறுத்திய பருவமழை

சென்னையில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இடைவிடாது மிரட்டிய மழையால் மக்கள் அச்சம் அடைந்தனர். தற்போது 4 நாட்களாக சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இதற்கிடையில், வங்க கடலில் சமீபத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அது வியாழக்கிழமை வங்க கடலில் நிலை கொண்டிருந்தது.  சனிக்கிழமை அந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டது.

கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதேபோல் உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. தி.நகர், மயிலாப்பூர், கிண்டி உள்ளிட்ட நகர் பகுதிகளில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. இதனிடையே, இரண்டாவது சுற்று பருவமழை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் என தமிழ்நாடு வெதர் மேன் கூறியுள்ளார். எனினும் மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Rain Update