” ரஷ்ய ராணுவம் அதிபர் புடினை தவறாக வழி நடத்துவதா அமெரிக்கா குற்றச்சாட்டு”..

ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் வடபகுதியில் உள்ள செர்னோபில் அணுமின் நிலை பகுதியில் நிலை கொண்டிருந்த ரஷ்ய படைகள் அருகிலுள்ள பெலாரஸ் நாட்டுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி கூறினார்.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புடினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேட் பெடிங்ஃபீல்டு தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவத்தின் மோசமான செயல்பாடுகள் குறித்தும் பொருளாதார தடைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் புடினிடம் எடுத்துரைக்க அவரது ஆலோசகர்கள் அஞ்சுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது அதன் மிகத்தவறான முடிவு என்பது தற்போது தெளிவாகிவிட்டாகவும், இதன் விளைவுகளை ரஷ்யா நீண்டகாலத்திற்கு அனுபவிக்கும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இதற்கிடையே உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளின் வீரர்கள் தங்கள் தளபதிகளின் உத்தரவுகளை மதிப்பதில்லை என உளவுத் தகவல்களை சுட்டிக்காட்டி இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

கடும் விரக்தியில் உள்ள ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை தாங்களே சேதப்படுத்துவதாகவும் சொந்த நாட்டு போர் விமானங்களையே சுட்டு வீழ்த்துவதாகவும் இங்கிலாந்து கூறியுள்ளது