காவி உடையில் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றினார் வெங்கய்யா நாயுடு

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் புகைப்படத்தை இட்டு பதிவிட்டிருந்தார்.

அந்த டிவிட்டர் பதிவில், காவி நிற ஆடையில், கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, நெற்றியில் விபூதி தரித்திருந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை வெங்கய்யா நாயுடு இணைத்திருந்தது சர்ச்சையானது.

இதற்கு சமூக தளத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தை இணைக்குமாறு கருத்துகள் பதிவிடப்பட்டன.

டிவிட்டர் பதிவு சர்ச்சையானதைத் தொடர்ந்து வெங்கய்யா நாயுடு, திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றினார்.

அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.  அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது.

அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது!  என்று பதிவிட்டிருந்தார்.