முக்கிய செய்திகள்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து..


நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்தனர்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் நசீம் ஜைதி மற்றும் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பான தென்னிந் திய அளவிலான விவாதக் கருத்தரங்கம் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) சார்பில் சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடந்தது.இதில் ஏடிஆர் அறங்காவலர் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் வரவேற்றார். சங்கத் தலைவர் அனில்வர்மா பேசும்போது, ‘‘தமிழகம் என்றாலே திருமங்கலம் பார்முலாதான் நினைவுக்கு வருகிறது. அந்தளவுக்கு இந்த பார்முலா நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது’’ என்றார்.

இக்கருத்தரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்கள் நசீம் ஜைதி மற்றும் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

தேர்தல் முறைகேடுகள், தேர் தல் வழக்குகள், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டத் தேர்தல், தேர்தல் செலவினங்கள், அரசியல் ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள், தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட சவால்கள் என பல்வேறு தலைப்புகளில் இந்த கருத்தரங்கம் நடந்தது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பேசியதாவது: தேர்தல் நேரங்களில் பணப்பட்டுவாடா செய்ய ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங் களைக் கூட விட்டு வைக்கவில்லை. சுய உதவி குழுக்கள் தான் பிரதான பணப்பட்டுவாடா சப்ளையர்களாக செயல்பட்டனர். தேர்தல் அறிவிப் புக்கு பின்னரும் கூட சில அரசியல் கட்சியினர் தில்லுமுல்லு செய்து போலி வாக்காளர்களை சேர்த்தனர். நாளிதழ்களில் ‘பெய்டு நியூஸ்’ அதிகமாக வந்தது. எல்லா முறைகேடுகளையும் கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால் அதையும் மீறி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜனநாயகம் மலர அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பல்வேறு சீரமைப்புகளைக் கட்டாயம் கொண்டு வர வேண்டிய நேரம் இது. இப்போது புதிதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குறைகூறி விட முடியாது.

நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசிய தாவது:

நாடு முழுவதும் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். ஆனால் பல்வேறு மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றை களைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசியலமைப்பு சட்டத்தின் சில இடங்களில் தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் தரப்படவில்லை.

இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கமே தேர்தல் முறைகேடுகளை தடுப் பதுதான். அதற்கு அரசியல் ரீதியாகவும் மாற்றங்களை சட்ட ரீதியாகவும் கொண்டு வர வேண்டும். ஆனால் அரசி யல் கட்சியினர் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் எழுவது இல்லை. ஜனநாயக ரீதியில் நியாயமான மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் விருப்பம். பணப்பட்டுவாடா போன்ற முறைகேடுகளை தேர்தல் ஆணையம் தடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முற்றிலுமாக பணநாயகம் ஒழிய மக்களிடமும் மாற்றங்கள் எழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) சார்பில் தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏடிஆர் அறங்காவலர் சுதர்சன் பத்மநாபன், இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்கள் நசீம் ஜைதி, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்.