சங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் காரைக்கால் அம்மையார் கோவில் வாசல் அருகே அரசுக்கு சொந்தமான அந்த டாட்டா சுமோ காலை 7 மணிக்கு வந்து நிற்கும், பிறகு மதியம்,அதன் பிறகு மாலை ஐந்து மணிக்கு வந்து நிற்கும்.

உலகாளும் ஈசனுக்கே உணவளித்து ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் எனும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய இசையின் தாய் அந்த புனிதவதியார் ஆலயம் அருகே எண்ணற்ற ஏழை பாழைகள் அரசாங்கம் தரும் அந்த உணவு பொட்டலங்களை அடித்து பிடித்து வாங்கி செல்வார்கள். சில நேரம் சோஷியல் டிஸ்ட்டன்ஸ் கடைபிடிக்கப்படும், சில நேரம் பசியால் அது மீறப்படும்.

ஒவ்வொரு முறை ஜீப் வந்து நிற்கும் பொழுதும் அந்த ஏழைகளோடு சரிக்கு சமமாய் அடித்து பிடித்து ஒன்றுக்கு நான்கு ஐந்து பொட்டலங்களை பெற்று விடும் ஓர் ஆசாமி வெள்ளையும் சள்ளையுமாக டிப் டாப்பாக இருக்கும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரலிங்கம். இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது.

இப்படி உணவு வினியோகம் செய்ய தினந்தோறும் ஜீப்பில் முதல் சீட்டில் அமர்ந்து வரும் அதிகாரி பாலனுக்கு ஒவ்வொரு நாளும் வாய் துடிக்கும், இந்த ஆள நாக்கை புடிங்கிக்கிற மாதிரி ஒரு கேள்வி கேக்கனும் என்று.

ஆனாலும் என்ன செய்வது கொடுக்கும் பொருள் உணவாயிற்றே, அதையும் தாண்டி தனக்கும் ஆசிரியராக இருந்த பெரிய மனுஷன். சாப்பாடு விஷயத்தில் போயி ஈவு இரக்கம் இல்லாமல் எப்படி அந்த மனுஷனை கண்டிப்பது.

ஆனால் இன்று எப்படியும் இந்த மனுஷன ஒரு வார்த்தை நறுக்குன்னு கேட்டுடனும் என்ற முடிவோடு சங்கரலிங்கத்தை கண்டும் காணாதது மாதிரியே ஜீப்பில் அமர்ந்திருக்கின்றார் பாலன். வழக்கம் போல் சங்கரலிங்கமும் ஒன்று இரண்டு மூன்று நான்கு என பொட்டலங்களை வாங்கி வாங்கி நைஸ்ஸாக அருகில் நிறுத்தி இருக்கும் தன் டி வி எஸ் வீகோ வண்டியின் சீட்டை தூக்கி தூக்கி உள்ளிருக்கும் குடோனில் பதுக்கி கொண்டிருந்தார்.

டாட்டா சுமோ கிளம்ப தயார் ஆனது டிரைவர் வண்டிய நிறுத்து, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, நீ கிளம்பு நான் ஒரு மணி நேரம் கழிச்சி வந்து உங்களோடு சேர்ந்துக்குறேன் என்று வண்டியை விட்டு இறங்கினார் பாலன்.

அதற்குள் சங்கரலிங்கத்தின் சாப்பாடு குடோன் வண்டி கிளம்பி கைலாசநாதர் கோவில் வீதி வழியே கிளம்பி மாதா கோவில் தெருவில் திரும்பி விட்டது. உடனே அருகில் இருக்கும் வீட்டுக்காரரிடம் சார் கொஞ்சம் டூ வீலர் இரவல் தாங்க இதோ கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன் என கேட்டு வண்டியை வாங்கி சங்கரலிங்கத்தை பின் தொடர்ந்தார் பாலன்.

நல்லவேளை வாத்தியாரின் வண்டி நீண்ட தூரத்தை கடந்திருக்கவில்லை, திருப்பத்தில் இருந்த மினரல் வாட்டர் ஏஜன்ஸியில் நின்றிருந்தது.

கடைக்காரன் சங்கரலிங்கம் வாத்தியாரிடம் கேட்டான் என்ன சார் இன்னைக்கு ரெண்டா இல்ல நாலா என. அஞ்சி தம்பி. என்னது அஞ்சா..ம்ம்ம் ம்ம்ம் அடிச்சி உடுங்க இந்தாங்க சார் என ஐந்து ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை தர அதை வாங்கி கொண்டு அதற்கான தொகையை தந்து புறப்பட்டார் சங்கரலிங்கம். பாலனும் விடுவதாக இல்லை.

அவரை பின் தொடர்ந்து கொண்டே மனதிற்குள் என்னடா இந்த வாத்தி, இங்க கவர்ன்மெண்ட் குடுக்குற சாப்பாட அடிச்சி புடிச்சி வாங்குனாரு, இங்க வந்து காசு குடுத்து மினரல் வாட்டர் வாங்குறாரு, சரி எங்க தான் போறாரு பார்ப்போம்.

நேராக சங்கரலிங்கத்தின் வண்டி கடைத்தெரு சித்தி வினாயகர் கோவில் அருகே நின்றது, இந்தாப்பா இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிட்டு என்று ஒரு பொட்டலத்தையும், ஒரு வாட்டர் பாட்டிலையும் அங்கிருந்த முதியவரிடம் கொடுத்து விட்டு கிளம்பினார்,

பாலனும் பின் தொடர்ந்தார் மாதா கோவில் வாசலில் கணவன் மனைவி என இருவர், இருவருமே கண் தெரியாத மாற்றுத்திறனாளிகள் அங்கே இரண்டு பொட்டலமும் இரண்டு தண்ணீர் பாட்டிலும் தரப்பட்டது.

மீண்டும் சங்கரலிங்கம் வாத்தியாரின் வண்டி புறப்பட்டு வலது புறம் திரும்பி பாரதியார் வீதி வழியே திருநள்ளார் ரோட்டில் திரும்பி மஸ்தான் பள்ளி பெரிய பள்ளிவாசலில் நின்றது.

அங்கே கால் நடக்க முடியாத ஒரு வயதான பெண்ணும், அவரின் வயதான கணவரும். வாத்தியாரின் வண்டியை பார்த்ததும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

அட என்னங்கைய்யா.. எங்களுக்கு தலை எழுத்து நாங்க இப்டி இருக்கோம், உங்களுக்கு ஏன்யா இந்த வேவாத வெய்யில்ல தெனமும் ஒரு நாளைக்கு மூனு வேளை அலையிறீங்க. எங்களாலயும் வேண்டாம்னு உறுதியா சொல்ல முடியல. ஆண்டவன் வச்ச அலாரம் அடிக்காம அலட்சியமா இருக்க மாட்டுதே..

என்னது அலாரமா ஆச்சர்யத்துடன் கேட்டார் சங்கரலிங்கம்..சிரித்து கொண்டே பொட்டலத்தை வாங்கியபடி அந்த பெண் சொன்னார் அட வயித்து பசியை சொன்னேங்கய்யா.

ஒரு வழியாக குறித்த நேரத்தில் ஐந்து பொட்டலங்களையும் டெலிவரி செய்து விட்ட சந்தோஷத்தில் தோளில் கிடந்த தன் டவலை எடுத்து வியர்வை முகத்தை துடைத்தபடி நிமிர்ந்தார் அவரின் மிக அருகே அதிகாரி பாலன்.

என்னப்பா பாலா இப்ப தான் ஜீப்புல பார்த்தேன், அதுக்குள்ள இங்க டூ வீலர்ல நிக்கிற. அப்புறம் உணவு வினியோகம் மற்ற மற்ற வேலைகள் எல்லாம் எப்டி போகுது.

போயி கிட்டு இருக்கு சார் அது இருக்கட்டும் இப்படி மூனு வேளையும் அங்க அடிச்சி புடிச்சி பொட்டலம் வாங்கி என்ன சார் இதெல்லாம்..

என்னமோ போப்பா உன்ன மாதிரி எத்தனை கடமை உணர்வுள்ள அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள்னு ராப்பகலா அலையிறீங்க. அதை எல்லாம் பார்க்கும் போது நான் செய்றதெல்லாம் எம்மாத்திரம்.

ஏதோ என்னால முடிஞ்சது ஒரு லட்ச ரூவா கலெக்டர் கிட்ட நிவாரண நிதியா கொடுத்தேன். டெய்லி பதினோரு மணிக்கு எங்க தெருவுக்கு வர்ர குப்பை வண்டிக்காரவங்க அஞ்சி பேருக்கு நானே டீ போட்டு குடுப்பேன். காலை மதியம் மாலை மூனு வேளையும்

இதோ நீ இப்ப பாத்திய இந்த வேலை. வேற எனக்கு சமைக்கல்லாம் தெரியாது. பையன் அமெரிக்காவுல, பொண்ணு கனடாவுல இருக்காங்க. பொண்ணு பிரசவத்துக்காக போன மேடம் இந்த கொரோனா கலேபரத்துல ஃப்ளைட் எல்லாம் இல்லாம பொண்ணு வீட்டுலயே தங்கிட்டாங்க. வீட்டுல சும்மா தான இருக்கோம்னு இந்த வேலைகள்.

திருப்பூர்ல 200 பாதுகாப்பு கவச உடைக்கு ஆன் லைன்ல நம்பர தேடி புடிச்சி ஆர்டர் பண்ணிருக்கேன், கிட்டதிட்ட அம்பதுனாயிரம் ஆகுது.

காசு கெடக்கு. காசு ஒரு மேட்டர் இல்ல குறித்த நேரத்துல நமக்கு கிடைக்குமான்னு தான் ஒண்ணும் புரியல, பால் வர்ர வண்டியிலயாச்சும் எப்டியாவாது அனுப்பி உடுங்கன்னு கேட்டுருக்கேன். அது வந்த பிறகு அதையும் கொண்டு போயி அரசாங்கத்து கிட்ட ஒப்படைக்கனும்.

சங்கரலிங்கம் அடுக்கி கொண்டே போக இடையில் ஃபோன்..ஹலோ சொல்லுடா தம்பி..ஐய்யய்யே இங்க நான் வீட்டுல ஒண்டி கட்டை தான், ஒண்ணு கூட எனக்கு வேனாம் எல்லாத்தையும் அங்க ஏழை பாழைங்களுக்கு பத்து பத்து காய்வொன்னு குடுத்து உட்டுட்டு. சொல்லியபடி ஃபோனை கட் செய்து விட்டு பாலனிடம் தொடர்ந்தார்..

ஃபோன்ல யார் தெரியுதா உன் ஃப்ரெண்டு கருணாநிதி தான். விழிதியூர்ல இருக்குற அவன் ஃப்ளை ஆஷ் கல் ஃபேக்டரி பக்கத்துல எனக்கு ஒரு பெரிய தென்னந்தோப்பு இருக்கு, ஆள வச்சி தேங்காய்வொல பறிச்சி அங்க இருக்குற ஏழைபாழைங்களுக்கு நீயே கொடுத்துடுன்னு அவன் கிட்ட சொல்லியிருந்தேன் அதான் அவன் ஃபோன்ல கேட்டான்.

சரி இதெல்லாம் உடு கண்ணுக்கெட்டுன தூரம் எதும் கடை கிடையாது, வீட்டுக்கு வா கொஞ்சம் டீ போட்டு தரேன் குடிச்சிட்டு போயேன். சங்கரலிங்கத்தின் பேச்சை தட்ட முடியவில்லை பாலனுக்கு எழுத்தறிவித்த இறைவனாச்சே. இன்னைக்கு நாம ஜீப்புல கெத்தா உக்காந்து போறதுக்கு சங்கரலிங்கமும் ஒரு காரணமாச்சே. இருவரும் கிளம்பினார்கள்.

அதோ அந்த பக்கெட்டுல மஞ்சள் தண்ணீர் நிரப்பி இருக்கு அதுல கை கால கழுவ்விட்டு உள்ள வாப்பா சொல்லிக்கொண்டே கை கால்களை கழுவி விட்டு கிச்சனின்ல் நுழைந்தார் சங்கரலிங்கம். டீ-யை பாலனிடம் நீட்டியபடியே சொன்னார்

அட நானே தினம் அம்பது பேருக்கு சமச்சி போட்டு புடுவேன், அரிசிலேர்ந்து சகலதும் இருக்கு, ஆனா அதுல நெறைய சட்ட நடைமுறைகள் எல்லாம் இருக்காமே. தனியார் எதும் செய்யல்லாம் கூடாதுன்னு. அதான் அத நான் முயற்சி செய்யல சொல்லி கொண்டே ரூமில் நுழைந்தார் வாத்தியார், பாலன் டீயை குடித்து கொண்டிருக்கும் போதே அந்த கட கட சத்தம் தொடங்கியது.

என்ன சார் நீங்க தையல் மெஷின்ல எல்லாம் தைப்பீங்களா.. ஆமாம்ப்பா இதோட ஐநூறுக்கும் மேல மாஸ்க் தச்சிட்டேன், என்னோட ஸ்கூட்டி சீட்டு கவர்ல எந்த நேரமும் இருபத்தைஞ்சி மாஸ்க் கைவசம் இருக்கும். இன்னைக்கு அஞ்சி மணிக்குள்ள இந்த வேலை எல்லாத்தையும் முடிக்கனும்.

இன்னேலேர்ந்து நம்ம ஊர் டைமண்ட் டிவியில பத்தாம் கிளாஸ் புள்ளைங்களுக்கு ஏதோ டீவியிலேயே பாடம் எடுக்க போறதா கேள்விப்பட்டேன். ரிட்டையர்ட் ஆனா என்னா படிச்ச படிப்பெல்லாம் மறந்தா போயிடும். சீ ஓ ஆஃபீஸ்ல கேட்டுருக்கேன் எனக்கும் இந்த பணியில் எதாவது பங்கேற்க ஒரு வாய்ப்பு குடுங்கன்னு. பேசி கொண்டே மாஸ்க் தைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் சங்கரலிங்கம்.

தையல் மெஷினில் கிடி கிடிக் கிடி கிடிக் சத்தத்தின் ஊடே ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஃபோன் அமெரிக்காவிலிருக்கும் பையனிடமிருந்து, என்னப்பா எப்டி இருக்கீங்க. நல்லா இருக்கேன்ப்பா.

நம்ம பாலன் சார் வந்தாரு அவருக்கு டீ போட்டு குடுத்துட்டு டிவி தான் பார்த்து கிட்டு கம்முன்னு உக்காந்து இருக்கேன். சரிப்பா சோஷியல் சர்வீஸு அது இதுன்னு எங்கயும் வெளில எல்லாம் போகலீல்லப்பா…

அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா எங்கயும் போகல வீட்டுலயே தான்ன் இருக்கேன். சரிப்பா ஏதோ திருப்பூர்ல ஒரு கம்பெனிக்கு அம்பதுனாயிரம் பணம் போடனும்னு சொல்லிருந்தீங்கல்ல,

அது இந்தியாவுல இருக்குற என் ஃப்ரெண்டு முத்தையன் கிட்ட சொல்லி ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லிட்டேன். நீங்க பேங்கு அங்க இங்கன்னு அலைய வேணாம் சொல்லி விட்டு கட் ஆனது மகனின் அழைப்பு.

ஃபோன் கட் ஆனதும் பாலனை வெக்கத்தோடு பார்த்து சிரித்தார் சங்கரலிங்கம். என்ன பையன் கிட்ட எங்கயும் வெளில எல்லாம் போகலன்னு வாத்தியார் பொய் சொல்றாரேன்னு பாக்குறியா. என்ன பன்றது யாராவது அவன் ஃப்ரெண்ட்ஸ் சொலிடுறாங்க அப்பாவ அங்க பார்த்தேன் இங்க பார்த்தேன்னு. ஹஹஹ

நான் ஒண்ணும் அரசு உத்தரவை மீறி எல்லாம் அலையிறது இல்ல இதோ பாருப்பா சோஷியல் சர்வீஸ் செய்ற வாலண்ட்டியருக்கான அனுமதி பாஸ் வாங்கி வச்சிருக்கேன்.

வைரஸ் தொற்று இல்லங்குறதுக்கான டெஸ்ட் செஞ்சி சர்டிஃபிகேட்டும் வச்சிருக்கேன். சரிப்பா பாலா உன் துறை சம்மந்தமா எதாவது உதவின்னாலும் தயக்கமில்லாம கேளு ஏதோ என்னால முடியுதான்னு பாக்குறேன்.

மதிய உணவு பொட்டலத்தை வாங்கியதற்காக இந்த மனுஷனையா நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்கனும்னு நெனச்சோம். ரிட்டையர்ட் ஆகி இந்த வயசுல இந்த கொரோனா விழிப்புணர்வில் இத்தனை விஷயங்களை ப்ராப்பரா செஞ்சி கிட்டு இருக்குற

இவர் எங்க. எல்லாரும் லீவுல இருக்கப்போ நாம இப்படி அலையிரோமேன்னு அலுத்து அரசாங்கத்த முனு முனுக்குற நாம எங்க என மனதில் நினைத்தபடியே சங்கரலிங்கம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எனும் பெயர்ப்பலகைக்கு ஒரு சல்யூட் அடித்த படி வண்டியை ஸ்டார்ட் பண்ணினார் பாலன்.

– நட்ராஜ் காரை சுப்பையா-

*கதாபாத்திரங்கள் யாவும் என் கற்பனையே ஆனால் சம்பவங்கள் 90% உண்மை…