முக்கிய செய்திகள்

சேலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு..


சேலத்தில் மக்கள் பாதை சார்பாகக் கோட்டை மைதானத்தில் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் வரும் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகளை மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தநிலையில், சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்திலிருந்து இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததோடு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்மையான நிலையை அறிந்துக்கொள்ளவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து மக்கள் பாதை இயக்கத்தின் சேலம் ஒருங்கிணைப்பாளர் கெளதமிடம் பேசினோம். ‘மக்கள் பாதை அமைப்பு சார்பாகச் சேலம் கோட்டை மைதானத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் லஞ்ச, ஊழலுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்காகச் சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நவம்பர் 2-ம் தேதி மைதான வாடகையாக ரூ.2,000 மற்றும் முன்பணமாக ரூ.3000 என மொத்தம் ரூ.5,000 செலுத்தி அதற்கான ரசீதியையும் பெற்றுக்கொண்டோம்.
இதையடுத்து, பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நோட்டீஸ் அச்சடித்து வீடு வீடாக, தெருத் தெருவாக அழைத்து விளம்பரம் செய்தோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்திலிருந்து போனில் அழைத்து, கோட்டை மைதானத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக நேற்று தெரிவித்தனர்.
நேரில் சென்று விசாரித்தபோது ’நீங்க கொடுத்த தேதியில் ஏற்கெனவே ஒருவர் பதிவு செய்துவிட்டார். அந்தத் தேதியில் நீங்கள் கூட்டம் நடத்த முடியாது. கிளர்க் மாற்றத்தால் இந்தத் தவறு நடந்துவிட்டது’ என்றார்கள். அவர்களிடம் அந்த ஃபைலைக் காட்டச் சொன்னோம். அந்த ஃபைலில் அக்டோடர் 11-ம் தேதி நாங்கள் கோட்டை மைதானத்தை புக் பண்ணியதாகவும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த யாதவமூர்த்தி என்பவர் 12-ம் தேதி புக் செய்ததாகவும் இருந்தன.
நீங்கள் எழுதி இருக்கும் ஃபைலின்படி பார்த்தால்கூட நாங்கள்தானே முன்னதாகப் பதிவு செய்திருக்கிறோம் என்று அவர்களிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு, இதுவேறு ஃபைல் என்று கூறியவாறே, எங்கள் கண்முன்னே அந்த ஃபைலைக் கிழித்தனர். அதை வீடியோவாகவும் எடுத்திருக்கிறோம்’என்றார்.
இதுபற்றி அஸ்தம்பட்டி உதவி ஆணையர் சத்தியமூர்த்தியிடம் விளக்கம் கேட்டோம். அவர் ‘கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. தடையில்லாச் சான்று கொடுக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. ஒரே தேதி கேட்டு பலர் எங்களிடம் பணம் கட்டலாம். யாருக்கு அந்த இடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் கலெக்டருக்கு மட்டுமே உள்ளது. கலெக்டர் இவர்களுக்கு கொடுக்காமல் மற்றவர்களுக்கு கொடுத்திருக்கலாம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்’ என்றார்.