சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார் …

சிங்கப்பூர் பிரதமர் லீ கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட போது

சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார்
சிங்கப்பூர் பிரதமர் லீ தடுப்பூசி போட்டுக்கொண்டு,நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று (ஜனவரி 8) காலை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார். பல்வேறு பொதுச் சுகாதார நிலையங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் தேசிய அளவிலான நடைமுறையின் தொடக்கமாக இது அமைந்தது.
நாட்டின் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் இயக்குநர் கென்னத் மாக், சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் 88 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரும் இன்று காலை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
“வலியில்லை, இது திறன்மிகுந்தது, இது முக்கியம்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகான 30 நிமிட கண்காணிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தடுப்பூசி போடும் பணி நடைமுறைப்படுத்தப்படும்போது, சிங்கப்பூரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என நம்புகிறேன்,” என்றார் பிரதமர்.

“தேவையான அளவுக்கு நமக்கு தடுப்பூசிகள் வந்துகொண்டிருக்கின்றன. நாம் முன்னதாகவே அவற்றை வாங்கியுள்ளோம். சிங்கப்பூரில் இருக்கும் அனைவருக்கும் போதுமான அளவுக்கு தடுப்பூசி மருந்து இருக்கிறது,” என்றார் அவர்.

சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி இங்கு வசிக்கும் அனைவருக்கும் தேவையான அளவுக்கு தடுப்பூசி இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் இடது கை பழக்கம் உடையவர் என்பதால் அவருக்கு வலது கையில் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த மூன்று வாரங்களில் அவருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்படும்.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தின் இரண்டு டோஸ்களை 21 நாள்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடப்படுபவர்களுக்கு, அதனைத் தொடர்ந்த சந்திப்பு முன்பதிவுகளை நினைவூட்டும் விதமாக, தடுப்பூசி அட்டை ஒன்று வழங்கப்படும்.

சிங்கப்பூர்வாசிகளுக்குத் தடுப்பூசி போடும் முறை வரும்போது அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
“அது நம்மைப் பாதுகாப்பாக்கும். உங்களையும் உங்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும். உங்கள் முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்,” என்றார் பிரதமர்.

மூத்த தாதி ஃபாத்திமா முகமது ஷா, 41 பிரதமருக்கு தடுப்பூசி போட்டதுடன், அதன் தொடர்பிலான தகவல்களை வழங்கினார். பின்னர் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அவர்.

“பிரதமருக்குத் தடுப்பூசி போடும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது,” என்று குறிப்பிட்ட தாதி ஃபாத்திமா, சற்று பதற்றமாக உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்ற நம்பிக்கையை சிங்கப்பூரர்களுக்கு ஏற்படுத்தும் விதத்தில் தாமும் தம்முடைய அமைச்சரவை சகாக்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாகக் கடந்த மாதம் பிரதமர் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூருக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி தடுப்பூசி வந்திறங்கியது. ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை ஆசிய அளவில் முதலில் பெற்ற நாடானது சிங்கப்பூர்.

தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் லியோ யீ சின் உட்பட 40 ஊழியர்கள் டிசம்பர் 30 அன்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

சிங்கப்பூரர்களுக்கும் இங்கு தற்போது வசிக்கும் நீண்டகால குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்.