முக்கிய செய்திகள்

சிறுவாணி நீர் வரும் குழாயை அடைக்கும் கேரளா: கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு வேட்டு ..

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி தண்ணீர்தான். சிறுவாணி அணை கேரளப் பகுதியில் அமைந்துள்ளது.
கரோனா’ அச்சுறுத்தலை சாதகமாக்கியுள்ள கேரளா, சிறுவாணி அணையில் ‘இன்டேக் டவர்’ அருகில் உள்ள குழாயை அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சிறுவாணி வனப்பகுதியில், 2018ம் ஆண்டு, ஜூலையில் தொடர் மழை பெய்தது. சாடிவயல் – அணை வரையிலான, 16 கி.மீ.,க்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

தமிழக வனப்பகுதி சாலை சீரமைக்கப்பட்டது; கேரளாவில் சீரமைக்கப்படவில்லை. ஒப்பந்தப்படி, ஆண்டுக்கு கொடுக்கும், 10 கோடி ரூபாயுடன் சேர்த்து சாலையை சீரமைக்க, 26 கோடி ரூபாய் கேட்டது கேரள அரசு. அதில், ஓராண்டுக்கும் மேலாக இழுபறி நீடித்தது.

இதனால், பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு வழியாக, குடிநீர் வாரியத்தினர் சென்று வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், அச்சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

யாரும் செல்ல முடியாத நிலையில், அணை பாதுகாப்பு என்ற பெயரில், கேரள நீர்ப்பாசனத்துறை தண்ணீரை வெளியேற்றியது. அதனால், நிரம்பி வழிய வேண்டிய அணை, நிரம்பாமல் போனது.
கடந்த சில நாட்களாக கேரள சாலை, மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. அதே சமயத்தில், நீர் உள்ளிழுக்கும் பகுதி (இன்டேக் டவர்) அருகில் உள்ள, வறட்சியில் கைக் கொடுக்கும் பழைய குழாயை மூடும் பணியும் நடக்கிறது.

இப்பணி, நான்கு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு, தீவிரமாக நடக்கிறது.இது வெளியில் தெரியாமல் இருக்க, கேரள வனத்துறை செக்போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது. சில நாட்களுக்கு முன், தமிழக குடிநீர் வாரியத்தினர், வனத்துறையினர் சென்றபோது, ‘கொரோனா’ அச்சுறுத்தலை கூறி, திருப்பி அனுப்பியுள்ளனர். எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்மட்டம் சரிவு
‘தற்போது, அணையின் நீர்மட்டம், 8.5 அடியாக சரிந்துள்ளது; நான்கு வால்வுகளில், மூன்றாவது வால்வு வரை தெரிகிறது. இதே நிலை நீடித்தால், ஜூன், 20ம் தேதி வரை மட்டுமே தாக்கு பிடிக்க முடியும்’ என்கின்றனர் குடிநீர் வாரியத்தினர்.

குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அணையில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தகவல் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எவ்வித அறிவிப்பும் இன்றி, வறட்சி காலத்தில் கை கொடுக்கும் குழாய் பகுதியில் பணி நடக்கிறது. தகவலறிந்து சாடிவயல் வழியே அணைக்கு சென்ற போது,

‘கொரோனா’வை கூறி, கேரள வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதே போன்று, 2014ம் ஆண்டிலும் முயற்சி நடந்தது. இது குறித்து, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.