13 ஆண்டுகளாக போராடிய அரசு ஓய்வூதியர்… 15 நாட்களில் தீர்த்துவைத்த தலைமைச் செயலாளர் இறை ‘அன்பு’!

தமிழகத்தில் மக்கள் கோரிக்கைகளின் ஈரம் காய்வதற்குள்ளேயே அரசு நிர்வாகத்தின் மின்னல் வேக செயல்பாடுகளால் அதிரடியாக நிறைவேற்றப்படுகின்றன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களுக்குள் கிராமப்புற ஏழை எளிய மக்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் உள்பட பலரின் நீண்டநாள் நிலுவையில் கிடந்த பிரச்சனைகள் கூடுதல் கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்பட்டு வருகின்றன.

அஞ்சல்வழி மனுக்களைத் தவிர்த்து வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பிவைக்கப்படும் குறைகளையும் உடனடியாக களைந்து மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு.

காலையில் முன்வைக்கப்படும் புகார்கள் விசாரிக்கப்பட்டு இரவுக்குள் நிறைவேற்றி வைக்கப்படும் அதிசயங்களும் நடக்கின்றன.

பிஎ”ப் பணத்திற்காக 13 ஆண்டுகளாக போராடிவந்த முன்னாள் அரசு ஊழியர் ஒருவரின் கோரிக்கை பதினைந்து நாட்களில் தீர்க்கப்பட்டுள்ளதை அதற்குச் சான்றாகக் கூறமுடியும்.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றியவர் சி. டென்சன். கடந்த 31.7.2008 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஆனால் அவருக்கு பி.எப் பணம் உடனடியாக கிடைக்கவில்லை.

பல நாள்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து பார்த்தார். தொடர்ந்து மனுக்கள் எழுதினார். எதுவும் அசையவில்லை. போராட்டத்திலேயே பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் மட்டுமே கடந்தன. கடைசியில் கவலைதான் மிஞ்சியது.

வயதும் முதுமையும் அவர் மனத்தை சோர்வடையச் செய்திருந்தது. எதுக்கும் ஒருமுறை தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதிப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தார்.

போராடி களைத்துபோன டென்சன், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததும் 23.7.2021 ஆம் தேதியன்று மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார்.

முன்னாள் அரசுப் பணியாளரின் 13 ஆண்டுக்கால கோரிக்கை 15 பணி நாட்களில் தலைமைச் செயலாளர் இறையன்புவின் மின்னல்வேக நடவடிக்கையால் நிறைவேறியுள்ளது. அவருக்குரிய பிஎஃப் பணம் ரூ. 71,609 கிடைத்தது. 16.8.2021 அன்று அவரது வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்தப்பட்டது.

இதுபற்றி நன்றி தெரிவித்து தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ள டென்சன், “13 ஆண்டுகள் ஏறாத படியில்லை. மன உளைச்சல்தான் மிச்சமாக இருந்தது. எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டேன்.

தலைமைச் செயலாளருக்கு என் நிலைமையைச் சொல்லி ஒரு கடிதம் எழுதினேன். 15 நாட்களில் பிஎஃப் பணம் கிடைத்துவிட்டது. அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இந்த உதவி கிடைக்க வழிசெய்த தலைமைச் செயலாளருக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பா. மகிழ்மதி