முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …


தமிழக அரசியலில் புதிய திருப்பமாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுஞர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது. சமீபத்தில், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும் ஆளுநர் மீது குற்றம் சுமத்தியது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏ துரைமுருகன் ஆகியோரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், ஆளுநர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார்

சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “அம்பேத்கர் பல்கலைக்கழக நியமனத்தில் முறைகேடு நடைபெறவில்லையென ஆவணங்களுடன் ஆளுநர் விளக்கமளித்தார். மேலும், ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது என்று நாங்கள் தெரிவித்ததையடுத்து, அதுகுறித்து பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், நியுட்ரினோ திட்டத்திற்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ள தமிழக அரசின் முடிவு காலம் கடந்த செயல் எனவும் தெரிவித்துள்ளார்.