ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்: நீதிபதி தருண் அகர்வாலா!..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலா, பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை குறித்து ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் ஒரு குழுவை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 30ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழுவினர், ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்திய குழுவினர், அங்குள்ள இயந்திரங்கள், உபகரணங்கள், தாமிர உற்பத்தி நடைபெறும் பகுதிகள், ரசாயனக் கிடங்குகள் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடைபெற்ற குமரெட்டியாபுரம் மற்றும் தெற்கு ரெட்டியாபுரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்த பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தனர்.

இதனையடுத்து, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஒரு சிலர் மனு அளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தருண் அகர்வாலா, மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

தேவைப்பட்டால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாகவும் தருண் அகர்வாலா கூறினார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன்,

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஆர். கண்ணன், மனோகரன்,

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லெவிங்டன் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.