முக்கிய செய்திகள்

மயிலுகள்: சுந்தரபுத்தன்

மயிலுகள் ஊரில் இருந்த நாட்களில் சிட்டுக்குருவி, நார்த்தங் குருவி, தவிட்டுக்குருவி, மைனா, மடையான், புறா, கிளி, குயில், காகம், காடை, கொக்கு என கண்ணில் தென்பட்ட பறவைகள் அதிகம்.

பெயர் தெரியாத பறவைகளும் உண்டு. தன் சின்ன சிறகுகளை வைத்துக்கொண்டு வேலி முட்களுக்குள் நுழைந்து நுழைந்து தவிட்டுக்குருவி இரை தேடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம். மூக்கின் நுனியில் மஞ்சளை வைத்திருக்கும் நார்த்தங்குருவி பிடித்து நானும் பத்தும் வளர்த்த கதையும் உண்டு. சிலோன் ராவத்தர் தோப்பின் தென்னமரப் பொந்துகளில் பார்த்த கிளிகள் பறந்துகொண்டே இருக்கின்றன. கீழகுளத்தில், வடக்குசேத்தி வயல்பரப்புகளில், வெள்ளையாற்றங்கரை மேடுகளில் மேய்ந்த கொக்குகள் வெண்மேகமாய் தெரிகின்றன.

வாய்க்காலில் நீரோடும் தடங்களில் தரையிறங்க காத்திருந்து வானில் சுற்றிவரும் விமானங்களைப் போல மீன் தேடி பறந்த மீன் கொத்திகள் மறையவில்லை. இனி மயில்களின் கதை… சிறுவயதில் சுவாமிலை முருகன் கோயிலில் பார்த்த மயிலை, பாடநூலில் தேசியப் பறவையாக படித்த மயிலை, எங்கள் ஊரில் பார்க்கமுடியுமா? சில நாட்களுக்கு முன் ஊருக்குச் சென்றபோது வாகனம் சத்தம் கேட்டு பறந்த சென்றன மயில்கள். பார்த்த ஆச்சரியம் நீங்கவில்லை. அடுத்தடுத்து விசாரித்தால், ஊரில் மயில்கள் அதிகம். ஐந்தாறு ஆண்டுகளாக ஊர்ப் பக்கம் மயில்களைப் பார்க்கமுடிகிறது என்றார் தம்பி கார்த்தி. உண்மைதான். சின்னையன் கொல்லையில், அச்சு முதலியார் வயல்வெளியில் அதிகாலையில் அந்தி மாலையில் மயில்களின் தரிசனம்.

ஊர்க்காரர்களின் அன்றாடப் பேச்சில் மயிலும் வந்துவிட்டது. புகைப்படங்களில் நீங்கள் பார்ப்பது ஊரில் நடமாடும் மயில்களின் காட்சி. நெற்பயிர்களை சேதப்படுத்தாத வரையில் மயில்கள் அழகுதான். அந்தப் புகார் மட்டும் வரவில்லை. ஆற்று மணல்வெளியும் வயல்வெளியும் மரங்களுமாக காட்சியளிக்கும் எங்கள் ஊருக்கு மயில்கள் கூடுதல் அழகுசேர்த்திருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாட்களில் கண்கொடுத்தவனிதம், மயிலூர் என்றும்கூட அழைக்கப்படலாம். எந்தக் காட்டில் இருந்து தப்பிவந்தனவோ இந்த மயில்கள்… படங்கள்: அருண்மொழி வர்மன், கண்கொடுத்தவணிகண்கொடுத்த வனிதம்.