முக்கிய செய்திகள்

நொறுங்கத் தின்றால் நூறு வயது! : மருத்துவர் இராமதாஸ்…

பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் மருத்துவருமான இராமதாஸ் இன்று வெளியிட்டள்ள அறிக்கையில்
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்றொரு பழமொழி உண்டு. இது நமது முன்னோர்கள் அனுபவித்து உரைத்த பொன்மொழி.

உணவை நன்றாக மென்று விழுங்கினால், அது உமிழ்நீருடன் சேர்ந்து இன்சுலின் இயல்பாக சுரக்க வகை செய்யும்.

அது மனிதர்கள் நோயின்றி வாழ வகை செய்யும்; அதன் மூலம் மனிதர்கள் 100 வயது வரை வாழ முடியும் என்பது தான் இந்த பழமொழியின் பின்னணியில் உள்ள தத்துவம் ஆகும்.

சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும், மனிதநேயம் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமி சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள எனது மூத்த மகளின் வீட்டில் நான் தங்கி இருந்த போது, மரியாதை நிமித்தமாக என்னை சந்திக்க வந்திருந்தார்.

அப்போது அவரது பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களில் பலருக்கு‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழியே தெரியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

அத்துடன் நிற்காமல், தமது உடல் எந்த அளவுக்கு நெகிழ்வுத் தன்மையுடன் உள்ளது என்பதை காட்டுவதற்காக, அவர் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து தரையில் அமர்ந்தார்.

Image may contain: 1 person, text அதேவேகத்தில் எந்த பிடிமானமும் இல்லாமல் எழுந்து நின்றார். அவர் அமர்ந்த வேகத்தையும், எழுந்த வேகத்தையும் பார்த்து நானே வியந்து போனேன்.

எழுந்த வேகத்தில் கூரையை முட்டி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு வேகமாக எழுந்தார். நொறுங்கத் தின்றதால் அவருக்கு கிடைத்த வலிமை அது.

அப்போது தான் நான் உணவருந்தத் தொடங்கியிருந்தேன். நான் எப்போதுமே நொறுங்கத் தின்பது தான் வழக்கம் என்பதை விளக்கினேன்.

மற்றொரு தருணத்தில் சித்த மருத்துவர் அன்பு கணபதி தைலாபுரம் தோட்டத்தில் என்னை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, நொறுங்கத் தின்பதில் உள்ள நன்மைகள் குறித்து உரையாடல் திரும்பியது.

அப்போது வாயில் சோற்றை வைத்தவுடன் 25 முறை மெல்ல வேண்டும்; அதன்பிறகே விழுங்க என்று அன்பு கணபதி கூறினார். அதைக் கேட்ட நான் சோற்றை 20 முறை மென்று தான் விழுங்குவதாக கூறினேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பாரம்பரிய மருத்துவர் நடராசன் என்பவர் எனக்கு ஒரு மடல் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் இன்சுலின் வாயில் சுரப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதாவது வாயில் சுரக்கும் உமிழ்நீர் இன்சுலின் செய்யும் வேலைகளில் பாதியை செய்வதாக கூறியிருந்தார்.

நாம் ஒரு வாய் சாப்பிடும் போது நன்றாக மென்று உமிழ்நீரில் உணவைக் கலந்து கூழாக்கி அனுப்ப வேண்டும்; அப்போது தான் இன்சுலின் நன்றாக சுரக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைப் படித்தவுடன் நான் உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். ‘‘ நீங்கள் சொல்வது உண்மை தான்.

ஆனால், பலர் உணவை வாயில் வைத்தவுடன் விழுங்கி விடுகின்றனர்’’ என்று கூறினேன். அதை அவரும் ஏற்றுக் கொண்டு அதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூறினார்.

கொரோனா நோய் பரவலால் தமிழகம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென இந்த சிந்தனை வந்தது.

உணவை நொறுங்கத் தின்றால் தான் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் வருவதை தடுக்க முடியும். நான் ஒரு வேளைக்கு இரு கைப்பிடி உணவு தான் சாப்பிடுவது வழக்கம். ஆனால், அதை அரை மணி நேரத்திற்கும் மேலாக நன்கு மென்று சாப்பிடுவது வழக்கம்.

ஆனால், இன்றைய இளைஞர்கள் அனைத்திலும் வேகமாக இருக்கிறார்கள். குறைந்தது அரை மணி நேரம் சாப்பிட வேண்டிய உணவை 5 நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறார்கள்.

துரிதமாக தயாரிக்கப்படும் உணவு தான் அவர்களுக்கு பிடிக்கிறது. துரிதமாக தயாரிக்கப்படும் உணவை, இன்னும் துரிதமாக அவர்கள் உட்கொள்கிறார்கள்.

அது அவர்களுக்கு அதை விட துரிதமாக நோயை ஏற்படுத்தும் என்பதை அறியாமலேயே அவ்வாறு செய்கிறார்கள்; அதன் மூலம் உடலை கெடுத்துக் கொள்கிறார்கள்.

நாம் உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும்போது, குறைந்த அளவு சாப்பிட்ட உடனேயே அதிக அளவு உண்ட திருப்தி கிடைக்கும். மென்று சாப்பிடாவிட்டால், அதிக அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ள நேரிடும்.

உணவை அதிக நேரம் மென்று தின்னும் போது தான் உணவுகளில் உள்ள சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும். அதுமட்டுமின்றி, உணவு உண்பதை கடமைக்காக செய்யக்கூடாது.

அதை அனுபவித்து செய்ய வேண்டும். அப்போது தான் உணவு உடல் நலனைக் கொடுக்கும்…. இல்லாவிட்டால் நோயைத் தான் கொடுக்கும்.