முக்கிய செய்திகள்

2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு? (சிறப்புக்கட்டுரை)

 

 

 

எஸ்.எஸ்.சுப்பிரமணியம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

 

 

 

 

 

 

 

 

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி 2018ஆம் ஆண்டு மின்வாரிய கொள்கை விளக்க குறிப்பை சட்டமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது புதிய மின் திட்டங்களை இயக்கத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் உள்கட்டமைப்பில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் தமிழகம் மிகை மின் மாநிலமாக மாறியுள்ளது என்றும் எதிர்வரும் காலங்களில் மின் உற்பத்தியில் உபரி நிலையே தொடரும் அதனால் தமிழகத்தில் மின்பற்றாக்குறையும், மின்வெட்டும் இருக்கவே இருக்காது என்று சூளுரைத்தார்.

 

ஆனால் அதே மின்துறை அமைச்சர் ஒரு வாரத்திற்கு முன்பாக 2019ஆம் ஆண்டில் தமிழகத்தில் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அதை ஈடு செய்ய குறைந்த கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1000 மெகாவாட் மின்சாரத்தையும் உச்சகட்ட தேவையை சமாளிக்க 500 மெகாவாட்டும் மின் கொள்முதல் செய்ய உத்தேசித்துள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழகம் மிகை மின் மாநிலம் அல்ல. மின் பற்றாக்குறை மாநிலமே என்பது அமைச்சரின் மின்சார கொள் முதல் அறிவிப்பில் இருந்து தெளிவாக தெரிகிறது.

 

பெரும் இடைவெளி

 

தமிழகத்தைப் பொருத்தவரையில் மின்சார தேவைக்கும், மின் உற்பத்திக்கும் ஒருபெரும் இடைவெளி உள்ளது. அதாவது சென்ற ஆண்டின் உச்சகட்ட தேவை என்பது 15,500 மெகாவாட்டையும் தாண்டியது. ஆனால் தமிழகத்தில் மின் உற்பத்தி என்பது மத்திய தொகுப்பில் இருந்து பெறும் மின்சாரத்தையும் சேர்த்தால் 13,281 மெகாவாட்டே என்பதிலிருந்து தமிழக மின்சாரத் தேவைக்கும் கிடைக்கும் மின்சாரத்திற்கும் ஒரு பெரும் இடைவெளி உள்ளது என்பது தான் புள்ளி விபரங்கள் கூறும் உண்மை நிலையாகும். இந்த இடைவெளியை எதிர்கொள்ளவே தனியார் மின் உற்பத்தியாளரிடம் இருந்தும், தன் பயனீட்டு உற்பத்தியாளரிடம் இருந்து (கேப்டிவ் ஜென ரோஷன்) மின்சார கொள்முதல் மூலமாகவும் மட்டுமே மின்சார தேவையை எதிர்கொள்வது என்பதுதான் உண்மை நிலை.

 

மின்வாரியம் வெளியிட்டுள்ள கூடுதல் மின்சார கொள்முதல் அறிக்கையில் நிலக்கரி பற்றாக்குறையும், திட்டமிட்ட காலத்தில் மின் நிலையங்களை முடிக்காததும் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்து பாரத் வழங்க வேண்டிய 500 மெகாவாட் மின்சாரத்தை வழங்காததும், எண்ணூர் விரிவாக்க அலை மின் நிலைய உற்பத்தியை குறிப்பிட்ட காலத்தில் துவங்காததும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததனால் தான் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நிலக்கரியைப் பொருத்தவரையில் தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களை இயக்க நாள் ஒன்றுக்கு 72.000 டன் நிலக்கரி தேவை என்றும் அதை பெரும்பாலும் விநியோகிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும், நிலக்கரி விநியோகத்தில் உள்ள குறையைச்சுட்டிக் காண்பித்து,மத்திய அரசிடம் இருந்து முழுமையாக நிலக்கரியை பெற்றிடுவோம் என்று இதே தமிழக அரசு தான் நிலக்கரி சம்பந்தமாக அறிக்கையை வெளியிடும் போது குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நிலக்கரியின் தேவையை முழுமையாக ஈடுசெய்ய E-Tender- Cum- Rverse Action மூலம் 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அரசு தனது கொள்கை விளக்க அறிவிப்பில் குறிப்பிட்டு விட்டு, நிலக்கரி பற்றாக்குறையினால் மின் பற்றாக்குறை ஏற்படும் என்று குறிப்பிடுவது விந்தையாக உள்ளது.

 

வெளி மார்க்கெட்டில் மின் கொள்முதலா?

 

தமிழக அரசு தனது 2018-19 கொள்கை விளக்கக் குறிப்பில் நடைமுறையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்கள் 6 என்றும், அதன் உற்பத்தி திறன் 6200 மெகாவாட் என்றும் இவைகள் அனைத்தும் 2018-20ல் மின் உற்பத்தியை துவங்கும் என்று குறிப்பிட்டு விட்டு இன்றைக்கு உற்பத்தி கிடைக்க வாய்ப்பில்லை; அதனால் அடுத்தாண்டு 2018-19ல் 1500 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவோம் என்று சொல்வது மக்கள் நலனில் அக்கறையற்ற போக்கே தமிழக அரசு கடைபிடிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

 

இப்போது கூட நடப்பில் கட்டுமான நிலையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுமானத்தை முடித்து மின் உற்பத்தி திட்டங்களை குறிப்பிட்ட காலத்தில் முடித்து, மின் உற்பத்தியை பெறுவதற்கு பதிலாக வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை கொள்முதல் செய்வதே தனக்கு சாதகமாக அமையும் என்று எண்ணுகிறதே என்ற ஐயப்பாடு மக்கள் மத்தியில் எழத்தானே செய்யும்.

 

தமிழக அரசு மின்சார கொள்முதலுக்கான அறிவிப்பினை வெளியிடும் போது, அடுத்த ஆண்டு மின்பற்றாக்குறை நிலவுவதை ஊகித்தும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் கூடுதல் விலை கொடுத்தாகிலும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை திட்டமிட்டு உற்பத்தி செய்வதற்கு மாறாக கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை பெறுவதாலேயே மின்வாரியத்தில் நிதி நிலையில் பெரும் இடைவெளி தொடர்ந்து கொண்டுள்ளது என்பதுதான் இன்றைய நிலை.

 

500 மெகாவாட்டுக்கு விலை எப்போது?

 

தமிழக அரசு கூடுதல் மின்சார கொள்முதல் அறிக்கையில் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்ய உள்ள 1000 மெகாவாட் மின்சாரத்தை 1 யூனிட் ரூ.5.29 பைசா என்றும், உச்சகட்ட மின் தேவையை சமாளிக்க கொள்முதல் செய்யவுள்ள 500 மெகாவாட் மின்சாரத்திற்கு கொள்முதல் விலையே பிறகுதான் நிர்ணயிக்கப்படும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இதைப் பொருத்தமட்டில் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெற உள்ள 1000 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு செல்வதற்குண்டான கட்டணம் என்பது குறிப்பிடப்படவில்லை.

 

அதையும் இணைத்தால் 1 யூனிட் மின்சாரம் ரூ.5.75 பைசா என்பதற்கு வாங்க மின்வாரியம் தயாராகி உள்ளது என்று தெரிகிறது. இதை பொறுத்தவரையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அனல் மின் கழகம் 1 யூனிட் மின்சாரத்தை பெறுவதை தவிர்த்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை பெறுவதற்கு என்ன காரணத்தால் முயற்சிக்கின்றது என்பது மக்கள் மத்தியில் எழத்தானே செய்யும்?

 

திட்டமிட்ட மின் நிலையங்களை காலத்தே முடித்து மின் உற்பத்தியை துவங்கி மின்சாரத்தை பெறுவதற்கு மாறாக, கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலமாக ரூ.2,700 கோடி கூடுதல் செலவாகும் என்று குறிப்பிடுவது மின்சார வாரிய நிர்வாகத்தின் மெத்தன நடவடிக்கையாகவே உள்ளது.

 

ஏற்கெனவே உயர் அழுத்த, வணிக மின் நுகர்வோர் மின்வாரியத்திடமிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பதிலாக தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கு சென்றுவிட்ட காரணத்தினால் சென்ற ஆண்டில் மட்டும் ரூ.1500 கோடி மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

தமிழக அரசு தமிழக மின் நுகர்வோர்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கட்டுப்படியாகும் விலையில் மின்சாரம் விநியோகம் செய்து மின் நுகர்வோர்களை தன்னிடமே தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதுதான் தமிழக மின் துறையை பொதுத்துறையாக காக்க உதவுமே தவிர அலங்கார வார்த்தைகளால் தமிழகம் மிகை மின் மாநிலம், தன்னிறைவு பெற்ற மாநிலம் என்று சொல்வது பயனற்றது.

 

நன்றி: தீக்கதிர் (theekkathir.in)