முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…..

சென்னையில் லேசான மழை பெய்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் புழுக்கத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. வெப்பத்தில் தகித்து வந்த காஞ்சிபுரத்தில் மழை காரணமாக இதமான சூழல் நிலவியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்றுடன் இதமான சூழ்நிலை உருவானது.

திருவாரூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கொடைக்கானல், வந்தவாசி, கும்பகோணம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

புதுச்சேரியில் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அண்ணாசாலையில் காற்றின் வேகம் காரணமாக மரம் சாய்ந்ததால் அதன் அருகே நின்றிருந்த ஆட்டோ ஒன்று நசுங்கியது.

இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.