தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தெற்கு வங்க கடற்பகுதியில் (5.8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இன்று மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.

நாளை(24.11.2021) திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.

நாளை மறுநாள்(25.11.2021) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 26.11.2021, 27.11.2021 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.