முக்கிய செய்திகள்

தமிழகம்,புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

தமிழகம்,புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு, குமரிக்கடல் பகுதிகளில் இருந்து தென் கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது.

அதே போல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மேகங்கள் உருவாகி மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 3 சென்டிமீட்டரும், நீலகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரில் சில இடங்களில் தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.