முக்கிய செய்திகள்

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவது உறுதி அணுசக்தி கழகத் தலைவர் உறுதி..


தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், நடவடிக்கை எடுக்கப்படும் – இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடியிலான இந்த திட்டத்தில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைத்து நியூட்ரினோ சோதனைகளை நடத்தப்படும் என அரசு தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதியை ரத்து செய்யக் கோரியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 20-ம் தேதி நடந்த போது, மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நியூட்ரினோ ஆய்வு மையத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று இந்திய அணுசக்தித்துறை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்ககல் செய்துள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாததால் இத்திட்டம் தாமதமாகியுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்த பின்னர் பணிகள் தொடங்கும் என்றும் அறிக்கையில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய அணுசக்தி கழகம் தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைவர் சேகர் பாசு கூறியுள்ளார். ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்காக அணுசக்தி கழகம் காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் ஆய்வு மையத்திற்கான பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.