முக்கிய செய்திகள்

திருவையாற்றில் பஞ்சரத்ன கீர்த்தனை..


திருவையாறு 171வது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, இன்று ( 6 ம்தேதி) காலை நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்துக்கொண்டு, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள சத்குரு தியாகராஜர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. 171வது ஆண்டு ஆராதனை விழா, கடந்த 2ம் தேதி மாலை துவங்கியது. அன்று முதல் தினமும் இன்னிசை கச்சேரி, வாய்ப்பாட்டு நடந்து வருகிறது.

இன்று ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனையொட்டி காலை திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள விழா பந்தலுக்கு வந்தனர். தியாகராஜ சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பிறகு, மங்கள இசை துவங்கியது. சரியாக 9 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது.

தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த “ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக…’ என்ற பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கெளளை ராகம் ஆதி தாளத்தில் அமைந்த “துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ…’ என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த “ஸாதிஞ்செநெ ஓ மநஸா…’ என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த “கனகன ருசி ரா கநகவஸந நிந்நு…’ என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த “எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு…’ ஆகிய பாடல்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒருமித்து பாடி இசைஅஞ்சலி செலுத்தினர்.

இசை நிகழ்ச்சியில் சீர்காழி சிவசிதம்பரம், சுதாரகுநாதன்,மஹதி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்றனர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும். நாதஸ்வர கச்சேரி, பின்னர் உபன்யாசம் நடந்தது. இரவு 8 மணிக்கு மல்லாரியுடன் வீதி உலா நடைபெறுகிறது.