திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..

தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களிலும் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 23ம் தேதியன்று வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் காலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.