புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா?..

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும் அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு நடைபெறவிருக்கும் மாநிலங்களவை பதவிக்கான தேர்தல் முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவினத் தொகையை மாநில தேர்தல் ஆணையம் பல மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்படி கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் 25 ஆயிரம் ரூபாயும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும் செலவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா அறிமுகம் செய்யப்பட உள்ளது.