குழந்தைகளின் உரிமையைக் காக்க புறப்பட்டார் த்ரிஷா!

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுங்கள் என்று யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பொறுப்பேற்ற த்ரிஷா பேசினார்.

யுனிசெஃப் அமைப்பு இந்தாண்டிற்கான உலக குழந்தைகள் தின (நவ.20) தலைப்பாக “குழந்தைகள் கையகப்படுத்துதல்”(Children Take Over) என்பதை தேர்வு செய்தது. அதை பிரபலப்படுத்தும் விதத்திலும், அந்த அமைப்பின் நல்லெண்ண தூதுவராக நடிகை த்ரிஷாவை நியமிக்கவும் யுனிசெஃப் அமைப்பு சென்னையில் குழந்தைகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண  தூதுவராக பொறுப்பேற்ற நடிகை த்ரிஷா, தமிழ்நாடு குழந்தை உரிமை அமைப்பின் தலைவர் நிர்மலா மற்றும் யுனிசெஃப் அதிகாரி சுதாராய் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளின் கைதட்டலுக்கு இடையில் நடிகை த்ரிஷா பேசியதாவது, “உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டியது. நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கவேண்டும். நான் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த விரும்புகிறேன். திறந்த இடத்தில் மலம் கழித்தல், ஊட்டச்சத்து குறைபாடு இவை அனைத்தும் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு படிப்பு மிக அவசியம், அவர்கள் படிப்பதனால் நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்” என்று பேசினார்.

பின் த்ரிஷா குழந்தைகளிடம் உரையாடினார். யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, த்ரிஷாவிற்கு நினைவுப் பரிசு அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளுடன் த்ரிஷா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Thrisha for Child Rights