முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்;டிடிவி தினகரன்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 22) வெளியிட்ட அறிக்கை:
“மனதைவிட்டு அகலாத கொடூரமாக, தூத்துக்குடியில் ஈவு இரக்கமின்றி 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே கறுப்பு நாள் என்று சொல்லுமளவுக்கு 2018, மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் காவல்துறையினரால் சொந்த மக்களே வேட்டையாடப்பட்டனர். நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாகப் போராடிய 13 பேரை தலை, நெற்றி, வாய், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய இடங்களில் குறிவைத்து குண்டுகளைப் பாய்ச்சி கொன்று குவித்தனர்.

அதோடு நிற்காமல், அடுத்தடுத்த நாட்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மீது தேவையின்றி வழக்குகளைப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தனர்.

‘மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை’ என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகளை மறந்து நிகழ்த்தப்பட்ட இந்த வெறியாட்டம் நடந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தூத்துக்குடி மக்களுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நான்கே மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதுவரை வழக்கில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அதேபோல எடப்பாடி பழனிசாமி அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் தனது விசாரணையை இன்னும் முடிக்கவில்லை.

‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்பதை உணர்ந்து தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி உடனே கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மக்களை பெருந்துயரத்தில் ஆழ்த்திய இந்தச் சம்பவத்தின் வடுக்கள் இன்னும் மறையாத சூழலில் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் என்றைக்கும் அமமுக தூத்துக்குடி மக்களுக்குத் துணை நிற்கும் என்ற உறுதியை அளித்து, உயிரிழந்தவர்களுக்கு இரண்டாமாண்டு நினைவு தினத்தில் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்”.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.