சொந்த அரசே மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் : கமல் விமர்சனம்..

மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று என,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

கடந்த மே 22, 2018 அன்று, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி,

சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தைக் காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.