முக்கிய செய்திகள்

45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா?: மேனா.உலகநாதன்

இப்படி ஒரு “புள்ளி”யில் சிக்கிக் கொள்வோம் என பிரதமர் மோடி எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமாவும், அதன் பின்னணியில் பொதிந்திருக்கும் சர்ச்சைகளும், பிரதமர் மோடிக்கு இதுவரை சந்தித்திராத சங்கடங்களை ஏற்படுத்தி உள்ளன.

தேசிய அளவில் தன்னாட்சி அமைப்பாக இயங்கி வந்த திட்டக்குழுவை கலைத்த போது மோடியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்ததால் பெரிய சலசலப்பு ஏற்படவில்லை.

அதேபோன்ற மற்றொரு தன்னாட்சி அமைப்பான ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிட்ட தருணத்தில், மோடியின் செல்வாக்கு சரியத் தொடங்கி இருந்ததால் விமர்சனங்கள் உரத்து ஒலித்தன.

சிபிஐ அமைப்பிலும் தனது சித்து விளையாட்டைக் காட்டிய போது, மோடியின் செல்வாக்கு அதல பாதாளத்திற்கு சரிந்திருந்ததால், சந்தி சிரித்து விட்டது.

இப்போது, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட இரண்டு உறுப்பினர்கள், மோடி அரசின் முகத்துக்கு நேரே ராஜினாமா கடிதத்தை வீசி எறிந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

என்னதான் நடந்தது?

நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த ஆய்வை, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் நடத்தி இருந்தது. இந்த ஆய்வறிக்கையை வெளியிட, தன்னாட்சி அமைப்பான தேசிய புள்ளியியல் ஆணையம் ஒப்புதல் அளித்த பின்னரும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அதற்கு முட்டுக் கட்டை போட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த புள்ளியியல் ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் பி.சி. மோகனன், மற்றொரு உறுப்பினர் ஜே.வி. மீனாட்சி இருவரும் தங்களது பதவிகளை ஜனவரி 28ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்தனர்.

இந்த விவகாரம் குறித்த பின்னணியை பிசினஸ் ஸ்டாண்டர்டு ஆங்கில ஏடு விரிவான தகவல்களுடன் வியாழனன்று  (ஜனவரி 31) வெளியிட்டது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியதாகவும், அதன் காரணமாகவே அதனை வெளியிடுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பதாகவும் பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேடு தெரிவித்துள்ளது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அந்த ஆய்வறிக்கை, கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 2012 வரை 2.2 சதவீதத்தை தாண்டாமல் இருந்து வந்த வேலையில்லாதோரின் எண்ணிக்கை, 2018 ஆம் ஆண்டு 6.1 சதவீதமாக அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ளது.  அதாவது, மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதை அந்த அறிக்கை தெளிவு படுத்தி இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேடு கூறுகிறது.  

கடந்த 2012 வரை 5 சதவீதமாக இருந்த கிராமப்புறங்களைச் சேர்ந்த படித்த வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை, 2018ல் 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று, நகர்ப்புறத்தைச் சேர்ந்த வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கையும் , கடந்த நான்கரை ஆண்டுகளில் 8.8 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இதுபோல், பணமதிப்பிழப்பு போன்ற மோடி அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளால் நாடு பெரும் பின்னடைவுகளையும், சிக்கல்களையும் சந்தித்திருப்பது அந்த அறிக்கையின் மூலம் அம்பலமாகி இருக்கிறது.

ஆனால், அந்த அறிக்கை இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்பதுதான் இதில் உச்சக்கட்டம்.

வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தால் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களைக் காட்டி அந்தக் கணக்கெடுப்பை நடத்த விடாமல் மோடி அரசு காலம் கடத்தி வந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்ததாக, அதே பிசினஸ் ஸ்டாண்டர்டு ஏட்டில் “Where has all the jobs data gone?” (வேலை வாய்ப்பு குறித்த அனைத்து தகவல்களும் எங்கே போயின?) (January 31, Business Standard) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள மற்றொரு கட்டுரை தெரிவிக்கிறது.

இதனிடையே, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் லேபர் பீரோ (Lanour Burea) என்ற அமைப்பு 2010க்கு பின்னர் நடத்திய வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் மட்டுமே தற்போது அரசு தரப்பில் வெளிவந்துள்ள தரவுகளாக கருதப்படுகிறது.

நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து துல்லியமான புள்ளி விவரம் எதுவுமே எந்தத் தளத்திலும் இல்லை என்பதே பிசினஸ் ஸ்டாண்டர்டு கட்டுரை நமக்கு சுருக்கமாக சொல்லவரும் செய்தி.

காட்டு வெள்ளத்தை கை வைத்துத் தடுக்க முயல்வது போல, தகவல்களை இருட்டடிப்பு செய்வதன் மூலம், தனது இமாலயத் தவறுகளை மறைத்து விட மோடி அரசு முயல்வது அனைத்து வகையிலும் தற்போது அம்பலமாகி இருக்கிறது.

இளைஞர்கள் அதிகமுள்ள ஒரு நாட்டில், வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பல்வேறு அபாயங்களுக்கான அறிகுறியாகும்.

தொழில்துறை நலிந்து, உற்பத்தித்துறை சரிந்து, தற்சார்பு நிலையில் இருந்து தடுமாறி அந்த நாடு வீழ்ச்சி அடைந்து விட்டதன் அடையாளமே வேலையில்லாத் திண்டாட்டமாக வெடித்துக் கிளம்புகிறது.

எந்த இளைஞர் கூட்டம் மோடியை தங்களை மீட்க வேந்த தேவதூதராக கருதி வாக்களித்ததோ, அவர்களே இன்று மோடியின் முதிர்ச்சியற்ற ஆட்சி நிர்வாகத்திற்கு பலியாகி நிற்பதுதான் வேதனை.

இனியும் மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், “தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம்” என பாரதி ஒரு காலத்தில் பாடி நொந்த நாடாக, இந்தியா கேடு கெட்டு நலியும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.