தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு : ப.சிதம்பரம் கண்டனம்.

தடுப்பூசி கொள்கையில் ஒன்றிய அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிக்கபட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,கரோனா தடுப்பூசிகள் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியாவில் 18 வயதிற்கும் மேற்பட்ட 94 கோடி பேருக்கும் முதல் தவணை தடுப்பூசி வரும் 31ம் தேதிக்குள் கிடைக்காது என்பதையும் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடைய முடியாது என்ற உண்மையையும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நாம் உணர்ந்து தான் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான அறிவிப்பில் குழப்பங்கள் ஏராளம் உள்ளன என்றும் கோவிஷீல்ட் செலுத்தியோருக்கான பூஸ்டர் டோஸ் என்பது மற்றொரு டோஸ் கோவிஷீல்ட் செலுத்துவது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமதமாகவே ஒப்பந்தம் செய்வது, தாமதமாகவே பணம் கொடுப்பது, ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்காதது, உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பற்றாக்குறை போன்ற ஒன்றிய அரசின் தவறுகளுக்கான விலையை மக்கள் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.