முக்கிய செய்திகள்

வடபழனி குருக்கள் மனைவி ஞானப்பிரியா கொலை வழக்கில் கணவர் பாலகணேஷ் கைது..


வடபழனியில் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் மீதான சந்தேகம் வலுக்கிறது என்று போலீஸார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஞானப்பிரியா கொலை வழக்கில் கணவர் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் வசிப்பவர் பாலகணேஷ் (40). இவரது மனைவி ஞானப்பிரியா (35). இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். பாலகணேஷ், சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி காலையில் பாலகணேஷ் கைகள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் குளியல் அறையில் மயங்கிக் கிடந்ததார்.

அவரது மனைவி ஞானப்பிரியா வீட்டுக்குள் கைகள் கட்டப்பட்டு தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வடபழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்து கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையும் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. வீட்டருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகணேஷுக்கு மயக்கம் தெளிந்தது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், “நள்ளிரவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு, நான் திறந்தேன். அப்போது, 2 நபர்கள் என்னை தாக்கினர். இதில் நான் மயக்கம் அடைந்து விட்டேன். அவர்கள்தான் எனது மனைவியையும் தாக்கி கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

பாலகணேஷின் பேச்சில் போலீஸாருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பாலகணேஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பாலகணேஷ் கூறியதுபோல 2 நபர்கள் வந்து சென்றது போன்ற காட்சிகள் பதிவாகவில்லை. எனவே, மனைவி கொலை வழக்கில் பாலகணேஷ் மீதான சந்தேகம் வலுக்கிறது. மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.