முக்கிய செய்திகள்

ஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ : துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்

திமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறிய கருத்து கூட்டணி குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியில் திமுக கூட்டணியில் உள்ளனவா இல்லையா என்பது பெரும் விவாதப் பொருளாகியது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். பின்னர் பேட்டியளித்த அவர், திமுகவுடனான உறவு இணக்கத்துடனும், வலிமையுடனும் இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், இன்று மாலை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது, மலர்ந்த முகத்துடன் வைகோவை வரவேற்ற ஸ்டாலின் அவருடன் கை குலுக்கினார்.

அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடனிருந்தனர்.

திமுக – மதிமுக, விசிக உறவு குறித்து நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.