முக்கிய செய்திகள்

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் உள்பட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு..

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலையில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

ரத்தின அங்கி, வைர பூணூல், கிளி மாலையுடன் நம்பெருமாள் காலை 5.30 மணியளவில் பரமபத வாசலை கடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.

இன்று இரவு வரை நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

வைகுண்ட ஏகாதசி காரணமாக ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நள்ளிரவு 12 .05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவமூர்த்திகள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்தனர்.

நேற்று இரவு முதல் காத்திருந்த பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர். தொடர்ந்து 44 மணி நேரம் இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இன்றும், நாளையும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நள்ளிரவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

அதிகாலையில் கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்த பெருமாள், பரமபதவாசல் வாயிலில் காத்திருந்த நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார்.

இந்த வைபவத்தை தொடர்ந்து வெங்கடகிருஷ்ணன் பார்த்தசாரதி ஆனந்த விமானத்தில் எழுந்தருளினார்.

இரவு முழுவதும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக, 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள கோவிலில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து தரிசித்தனர்

திருப்பதியில் இருந்து பிரசாதமாக 5000 லட்டுகள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.