முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கவலைக்கிடமாக உள்ளது.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையின் காரணமாக, ஓரளவு உடல்நிலை சீராக இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. 94 வயதாகும் வாஜ்பாய் மூட்டுவலி பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 10 முறை மூட்டு வலிக்கான அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் சிகிச்சை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில் இன்றிரவு வாஜ்பாயின் உடல் நிலை கவலைக்கிடமானது. தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திரமோடி, மருத்துவமனைக்கு விரைந்து சென்று, வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார். சுமார் 50 நிமிடங்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கு, டாக்டர்களை சந்தித்து, வாஜ்பாய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார்.

இந்நிலையில் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Vajpayee’s Condition Worsened: AIIMS