முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை: விவேக் ஜெயராமன்


இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவருடைய மகள் என்றும், அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்றும் சிலர் அவதூறுகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது.

ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆனபிறகும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் சிலர் தங்கள் விருப்பத்திற்கு கதை கற்பனைகளை கிளப்பிவிட்டு ஒரு மாபெரும் தலைவியின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது கொஞ்சமும் சகிக்க முடியாத மனசாட்சியற்ற செயல். வெற்று வார்த்தைகளாக சிலர் பேசும் இத்தகைய அவதூறுகளை ஊடக தர்மத்துடன் நிறைய ஊடகங்கள் வெளியிடாமல் தவிர்த்து வந்தாலும் சில ஊடகங்கள் பரபரப்புக்காக இதனை வெளியிடுவது வேதனை அளிக்கிறது.

அவருக்கென்று யார் இருந்திருந்தாலும் அவர் மறைத்திருக்க வாய்ப்பே இல்லை. எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் தமிழக மக்களிடத்தில் செல்வி ஜெயலலிதா என்கிற பெருமைமிகு அடையாளத்தோடு வாழ்ந்தவரை வேறுவிதமாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொது வாழ்க்கைக்கு வருகிற பெண்களுக்கான முன் உதாரணமாகவும் தைரிய அடையாளமாகவும் விளங்கும் ஜெயலலிதாவின் மரியாதையை குறைக்கும் விதமான எந்த செயலையும் யார் செய்தாலும் ஏற்க முடியாது.

இத்தகைய அவதூறுகளை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் இனி யார் ஈடபட்டாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.