‘விழித்திரு’ : திரைவிமர்சனம்…


விதார்த், கிருஷ்ணா வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன், தன்ஷிகா, டி.ஆர், தம்பி ராமையா, எஸ் பி சரண், அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன்… என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, “அவள் பெயர் தமிழரசி” ஹிட்பட இயக்குனர் மீரா கதிரவனின் எழுத்து, இயக்கத்திலும், தயாரிப்பிலும் வந்திருக்கும் படம் தான் “விழித்திரு”.
ஒரே இரவில் நடக்கும் நான்கு வெவ்வேறு சம்பவங்களும் அதன் திக் திக் திகில் தொடர்ச்சிகளும் ஒரே இடத்தில் சந்தித்து சம்பந்தப்பட்டு முடிவதே ‘விழித்திரு’ படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்பு மான கரு, கதை. களம் எல்லாம்.
அதாகப் பட்டது, வீடு புகுந்து திருடும் தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட திட்டமிட்டு செல்கிறார். அதே வீட்டிற்கு கொஞ்சம் முன் திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின்உரிமையாளர் தம்பி ராமையா பிடித்து, மணமகள் கோலத்தில் கட்டிப் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்.
அதைக் கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அங்கு திருடிய நகைகளை ஒருவருக்கொருவர் பங்கு போட்டுக் கொள்ளாமல் எப்படி ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி முழுசாக எடுத்துக் கொள்ளலாம் என்று வரும் வழியில் மனதிற்குள்ளேயே சதி திட்டம் போட்டு வருகிறார்கள்…. இருவரும்.
இது ஒருபக்கம் இருக்க, அதே இரவில் ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் பர்ஸை பறிக்கொடுக்கிறார்.
இதனால் தற்காலிகமாக கால் டாக்சிடிரைவராக வேலைக்கு செல்கிறார். இவரதுகாரில் பத்திரிகையாளரான சரண் பயணிக்கிறார். அமைச்சர் ஒருவரும் அவரது அடிமை போலீஸ்காரர் ஒருவரும் ஒரு பிரச்சனையில் ஊரை நாசம் செய்த ஆதாரத்தை பத்திரிகையாளரான சரண் தன் வசம் வைத்திருப்பதால், அந்த காரில் பயணிக்கும் போது அவர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார்.
இதை ஆக்டிங் கார் டிரைவரான கிருஷ்ணா பார்த்ததால், அவரை கொல்ல, அமைச்சரும், அவரது அடிப்பொடி போலீஸ்காரரும் திட்டம் போடுகிறார்கள். இது ஒரு பக்கம்.
மேலும் ஒரு பக்கம், தன் அழகிய பெண் குழந்தையுடன் கண் தெரியாமல் வாழ்ந்து வரும் வெங்கட் பிரபு, தான் வளர்த்த நாய் குட்டியும் அந்த அழகிய பெண் குழந்தையும் காணாமல் போக, அவற்றை தேடி அந்த இரவில் வருகிறார எனும் சம்பவங்களையும் கதையாக்கி இணைத்து, அதனுடன், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்ற எண்ணத்துடன் இருக்கும் புதுமுகம் ராகுல் பாஸ்கரன், பணத்தை வைத்து ஒரு பெண்ணை அடைய நினைக்கிறார்.
அதற்கு அந்தப் பெண் பாடம் புகட்ட நினைக்கிறார். இந்த நான்கு கதைகளும் ஒரே இரவில் நடந்து, ஒரு இடத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இணைகிறது. அது எப்படி? ஏன்? எதற்கு…? என்பதே “விழித்திரு” படத்தின் சூடும் சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்.
நான்கு நாயகர்களில் முதல் நாயகராக திருடனாக வரும் விதார்த், தனது வழக்கான ஆர்ப்பாட்டம் இல்லாது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை மாதிரியே பர்ஸை பறிக்கொடுத்து சிக்கலில் மாட்டும் “கழுகு” கிருஷ்ணாவின் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது.
மற்றொரு நாயகராக வரும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவும் பார்வையற்றவராக பெண் குழந்தையை தவறவிட்ட அப்பா(வி) ஆக யதார்த்தமாக நடித்து ரசிகனின் நெஞ்சில் இடம் பிடித்து விடுகிறார்.
வசதி படைத்த வாலிபராக நடித்திருக்கும் புதுமுகம் ராகுல் பாஸ்கரன், இவர்களுக்கு இணையாக இயல்பாக நடிக்க முயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறார். நாயகர்கள் நால்வர் மாதிரியே பலே திருடியாக வரும் கதாநாயகி தன்ஷிகாவும் வசீகரமாக வந்து வளமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தம்பி ராமையா, எஸ் பி சரண், அபிநயா, எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, கெஸ்ட் ரோலில் வரும் சுதா சந்திரன் ஒற்றைபாடலுக்கு டி.ஆராகவே வந்து அழகிகளுடன் செம குத்துப் போடும் டி.ராஜேந்தர் உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு இப்படக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
“வாடி என் சில் சிலா” என டி.ஆர் ஆடிப் பாடும், பாடல் உள்ளிட்ட பாடல்கள் சத்யன் மகாலிங்கம் இசையில் தாளம் போட வைக்கும்.ரக ராகம். மனிதர் பின்னணி இசையும் பிரமாதம்.
ஒரே இரவில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளை உருவாக்கி, அவற்றை ஒரே முடிச்சில் சந்திக்க வைக்கும் கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுசு. அதற்காகவும் அதை போரடிக்காமல் வித்தியாசமாகவும் விறு விறுப்பாகவும் இயக்கி இருப்பதற்காகவும் இயக்குனார் மீரா கதிரவனை பாராட்ட வேண்டும்.
அவரது எழுத்தில், “பிச்சைக்காரன்ட்டியே பிச்சை எடுக்கும் பணக்காரனை இப்பதான் பார்க்குறேன்…”, “கழுதை மேய்க் குற பிள்ளைக்கு இம்புட்டு அறிவா?”, “சந்திரபாபுக்கே சரோஜாதேவி கேட்குதா.?”என்பது உள்ளிட்ட நக்கல் நையாண்டி வசனங்களும் படத்திற்கு பெரிய ப்ளஸ்.
மேலும், “ஒவ்வொரு மனிதனும், தான் சந்திக்க கூடிய ஒருவர், தமக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால், நம் வாழ்க்கை அவனுடையே பயணிக்கும் “என்பதை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.
என்பது கூடுதல் சிறப்பு! அதே மாதிரி, அக்கதைக்கு சிறப்பான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து, அதற்கேற்ற நட்சத்திரங்களையும் தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன் என்பது மேலும் சிறப்பு! சிலிர்ப்பு!
ஆக மொத்தத்தில் ‘விழித்திரு’ தமிழ் சினிமா ரசிகர்களை பார்த்து, ‘வியந்திடு’ எனும் அளவிற்கு இருக்கிறது!”
Rating: 3.5/5