பெண் பத்திரிகையாளருக்கு வெள்ளை மாளிகை போட்ட தடா!: அமெரிக்காவிலும் தான் அல்லாடுது ஊடக சுதந்திரம்!

ஏதோ, இந்தியாவிலும், தமிழகத்திலும் மட்டும் தான் ஊடகங்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதாக நீங்கள் கருதினால், அந்தக் கருத்தை இன்றுடன் மாற்றிக் கொண்டுவிடுங்கள். அமெரிக்காவிலும் இதுதான் கதி. சிஎன்என் தொலைக்காட்சியின் பிரபல செய்தியாளர் கெய்ட்லான் காலின்ஸ் (Kaitlan Collins)க்கு,  அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளைமாளிகை செய்தியாளர்கள் சங்கம் (White House Correspondents Association )  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கெய்ட்லான் காலின்ஸ் என்ற பெண் பத்திரிகையாளர் செய்த தவறு என்ன தெரியுமா… புதன் கிழமை வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடு ஜுங்கர் (Jean-Claude Juncker )-ம், அதிபர் ட்ரம்பும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.  ஜூங்கர் பேசி முடித்த பின்னர் ட்ரம்ப் பேசினார். அப்போது,  பிளேபாய் பத்திரிகையின் நடுப்பக்க அழகி ஒருவரது வாயை அடைக்க பணம் கொடுப்பது குறித்து ட்ரம்ப் பேரம் பேசியதாக வெளியான தகவல் பற்றி பெண் பத்திரிகையாளர் கெய்ட்லான் காலின்ஸ் கேள்வி எழுப்பினார். மைக்கேல் கோஹென் (Michael Cohen) என்பவர் இதுகுறித்த உரையாடல் அடங்கிய டேப் ஒன்றை வெளியிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி காலின்ஸ் அந்தக் கேள்வியை எழுப்பவே ட்ரம்ப் கொதித்துப் போனார். காலின்ஸ் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே அந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வை முடித்துக் கொண்டு போய்விட்டார். இதன் பின்னர் மாலை வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் முன்னறிவிப்பு எதுவுமின்றி செய்தியாளர்களைச் சந்தித்தார். இதற்கு அனைத்து ஊடகங்கள், பத்திரிகைகளிலும் இருந்து செய்தியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், வழக்கமாக வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து பங்கேற்கும் பெண் பத்திரிகையாளர் கெய்ட்லான் காலின்ஸூக்கு மட்டும் அழைப்பில்லை. மேலும், கெய்ட்லான் காலின்ஸூக்கு மட்டும்தான் தடையே தவிர, கேமரா மேன், போட்டோ கிராபருக்கெல்லாம் தடையில்லை என வேறு வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சிஎன்என் நிர்வாகம், செய்தியாளர் சந்திப்பில் தொடர்பில்லாத விவகாரம் குறித்து செய்தியாளர் காலின்ஸ் கேள்வி எழுப்பியதற்காக அவரது பங்கேற்பு தடை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பழிவாங்கும் போக்கையும், ஊட சுதந்திரத்திற்கு எதிரான உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய நடவடிக்கையாக இருப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம்,  விரும்பத் தகாத கேள்வியைக் கேட்டார் என்பதற்காக செய்தியாளர் ஒருவருக்கு தடைவிதிப்பது ஏற்கத்தக்கதல்ல எனத் தெரிவித்துள்ளது. அதிபர் உட்பட அனைத்து உயர் பதவிகளில் உள்ளவர்களையும் நமது குடியரசில் கேள்வி கேட்க தடையில்லை என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை தவறான வழிகாட்டுதலின் படி செயல்படுவதையே இது காட்டுவதாகவும், அனைத்து பத்திரிகையாளர்களும் அச்சமின்றி தங்களது பணியைத் தொடர்வதற்கான தனி உரிமைக்கு தங்கள் சங்கம் முழு ஆதரவைத் தருவதாகவும்  வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால், மோடி, ஈபிஎஸ் அரசு மட்டுமில்லீங்க, ட்ரம்ப் அரசும் இதே மாதிரித்தான் நடந்து கொள்கிறது என நாம் ஆறுதல் கொள்ளலாம். இதுல யாரு, யாரை காப்பி அடிக்கிறாங்கங்குறது மட்டும்தான் புரியல…

WHITE HOUSE BANS CNN REPORTER KAITLAN COLLINS FROM TRUMP PRESS CONFERENCE