திமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ : சென்னை வந்த சோனியாகாந்தி , பிரியங்கா காந்தி : முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அமைச்சர்கள் நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.