நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது.
நாகபட்டிணம் (நாகை) துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர்.

சிங்களம், தமிழில் வணக்கம் சொன்ன பிரதமர்: கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா – இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துரை – இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல்.

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்” என்று கூறினார். இந்தியா – இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசினார்.
நாகையிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்ல ரூ.7,670 கட்டணமாகும். தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) டிக்கெட் விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்குவர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இக்கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும்.

150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.

பயண நேரம்: நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துரை துறைமுகத்துக்கு பகல் 12 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.