குட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கு புகாரில், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. அமைச்சர்கள், டிஜிபி, கலால் வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வரை மாத மாதம் லஞ்சம் கொடுத்ததாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் டைரியில் எழுதி வைத்திருந்தார். இந்த வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவராவ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் குட்கா வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள்  சுமார் 6 மணி நேரம் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். அவரது உதவியாளர் சரவணன் 2 நாட்கள் விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர்.

அதே போல் குட்கா ஊழலில் தொடர்புடைய  அமைச்சர் பி.வி.ரமணாவும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சட்டவிரோதமாக குட்கா குடோன் இயங்கிய காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் பி.வி.ரமணா. குட்கா முறைக்கேடு வழக்கில் இதுவரை அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் பக்கம் சிபிஐ விசாரணை திரும்பியிருப்பது குறிப்பிடத் தக்கது.