கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டி: கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் கம்யூ., தலைவர் காரத்

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் அமேதி தொகுதியில் ஏற்கனவே போட்டியிடும் ராகுல் காந்தி, கூடுதலாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட ஒப்புதல் அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வயநாடு தொகுதியில் முக்கியமாக இடதுசாரிகளை எதிர்க்கவே ராகுல் காந்தி போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், ராகுல்காந்தியை வயநாடு தொகுதியில் நிச்சயம் தோற்கடிப்போம் எனத் தெரிவித்துள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், திமுக கூட்டணியில், காங்கிரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் ஒரே கூட்டணியில் உள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில், இடதுசாரிகளை எதிர்த்து ராகுல் காந்தியே போட்டியிடுவது அரசியல் அரங்கில் அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்திருக்கிறது.