ஜெ.,வின் வேதா நிலையம் இல்லத்தில் ஆய்வு முடிந்தது

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தின் பரப்பளவு குறித்த ஆய்வு சுமூகமாக முடிந்துள்ளது என்று சென்னை மாவட்டக் கலெக்டர் அன்புச் செல்வன் தெரிவித்தார்.

இதுகுறித்து கலக்டர் அன்புச் செல்வன் கூறுகையில், ”வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் பணிகள் துவங்கிவிட்டது. வேதா இல்லத்தின் பரப்பளவு குறித்த ஆய்வுகள் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. ஆய்வு நடத்துவதற்கு முன்பே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்களும் எங்களுடன் வந்து இருந்தனர். நில அளவையாளர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள், போலீசார் வந்து இருந்தனர். வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட இரண்டு அறைகள் திறக்கப்படவில்லை” என்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் வசித்த போயஸ்கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ நினைவிடமாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்தனர். வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்கும் முன் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமிக்கு தீபா கடிதம் எழுதி இருந்தார். ஜெயலலிதாவுக்குப் பின்னர் அவர்கள்தான் முறையான வாரிசுதாரர்கள் என்பதால், நிலப் பரப்பளவுக்கு ஏற்ப அவர்களுக்கு அரசுடைமையாக்கப்படும் பட்சத்தில் அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

 இந்த நிலையில், இன்று முதல் கட்டப் பணிகள் துவங்கியுள்ளது. வேதா இல்லத்தின் பரப்பளவு கணக்கிடப்பட்டுள்ளது.