தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதனை தொடர்ந்து தமிழகம் புதுவையில் முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.சென்னையில் மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகம், டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

‘கட்டாயமாக கடையை அடைக்க வற்புறுத்தினாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’, என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரியில் நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் ‘பந்த்’ காரணமாக அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தமிழக-கேரள எல்லையில் கேரள பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.