ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லெட் ஆலை விவகாரம்

பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை நியமித்தது. தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்திய இந்தக் குழு, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக் கேட்டனர்.

இதன் பின்னர், டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை இந்தக் குழு சீலிட்ட கவரில் தாக்கல் செய்தது. அந்த ஆய்வறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் திறக்க உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது எனக் கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க உத்தரவிட்டதுடன், துண்டிக்கப்பட்ட மின்சாரத்தையும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கவும் ஆணையிட்டது. அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் போது மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதில், வேதாந்தா நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான புகார்களை, பொதுமக்கள் தெரிவிக்க இணையதள வசதி செய்ய வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர்

இந்நிலையில் சேலத்தில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேதிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.