20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: மத்திய அரசு அறிவிப்பு..


2017-18 நிதி ஆண்டில் 20 அரசு வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரத்து 139 கோடி முதலீட்டு நிதியாக மத்திய அரசு வழங்குகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார்.

இதில் அதிகபட்சமாக ஐடிபிஐ வங்கி ரூ.10 ஆயிரத்து 610 கோடி நிதி பெறுகிறது.

அரசு பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கும் நோக்கில் ரூ.2.1 லட்சம் கோடி முதலீட்டு நிதி அளிக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிதி 2018-19, 2019-20 ஆம் நிதி ஆண்டில் பிரித்து தரப்படும் எனத் தெரிவித்தது.

வங்கிகளுக்கு வழங்கப்படும் முதலீடு நிதி குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:

அரசு பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை உயர்ந்த தரத்துக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் கடந்த காலத்தில் இருந்தது போன்று வரும் காலத்தில் மோசமான நிலைமை வராமல் தடுக்க வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் ஏராளமான வாராக்கடனில் சிக்கித் தவிக்கிறது. இதை மீட்கும் வகையில் இந்த முதலீடு நிதி அளிக்கப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் மார்ச் 31-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கிக்கு ரூ.8,800 கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.9 ஆயிரத்து 232 கோடியும் வழங்கப்படும்.

யுசிஓ வங்கிக்கு ரூ.6,570 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.5,473 கோடி, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.5,375 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.5,158 கோடியும், கனரா வங்கிக்ககு ரூ.4,865 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.4,694 கோடியும் அளிக்கப்பட உள்ளது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.4,534 கோடியும், ஓரியன்டல் ஆப் காமர்ஸ் வங்கி ரூ.3,571 கோடியும் , தீனா வங்கி ரூ.3,045 கோடியும், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா ரூ.3,173 கோடியும் வழங்கப்பட உள்ளது.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ2,634 கோடி, கார்பபரேஷன் வங்கி ரூ.2,187 கோடி, சின்டிகேட் வங்கிக்கு ரூ.2,839 கோடி, ஆந்திரா வங்கிக்கு ரூ.1,890 கோடி, அலகாபாத் வங்கிக்கு ரூ.1500 கோடியும், பஞ்சாப் அன்ட் சிந்து வங்கிக்கு ரூ.785 கோடியும் நிதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.