முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தலில் 69.55% வாக்குகள் பதிவு: துப்பாக்கிச் சூடு, தடியடி, மண்டை உடைப்பு ரணகளங்களுக்கும் குறைவில்லை

தமிழகத்தில், துப்பாக்கிச் சூடு, தடியடி, மண்டை உடைப்பு என ஆங்காங்கே பதற்றமும், கலவரமுமாக நடந்து முடிந்துள்ளது மக்களவைத் தேர்தல்.

மக்களவைத் தேர்தலில் சராசரியாக 69.55 % வாக்குகளும், 18 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 77.62 % வாக்குகளும் பதிவாகி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மதுரையில் மட்டும் 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

ஊர்கள் தோறும் மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் ஆங்காங்கே வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களில் மோதல் மூண்டது.

ஆம்பூர் அருகே வேட்பாளரை தாக்க முயன்றவர்களை கலைக்க தடியடி நடத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வாக்குப்பதிவு மையத்தின் அருகே சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை கீழே போட்டு உடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அது கைகலப்பாக மாறியதில் ஒருவரது மண்டை உடைந்தது.

தொடர்ந்து ஒரு கும்பல் காலனி பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளை அடித்து, நொறுக்கி சூறையாடினர். இந்த மோதல் சம்பவத்தை அடுத்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரின் களத்துமேட்டு பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றுகொண்டிருந்தபோது, போதை ஆசாமி ஒருவன் தாக்கியதில் ஒருவருக்கு முன்பக்க பற்கள் இரண்டும் உடைந்தன.

முனுக்கப்பட்டு மற்றும் ஆரணிபாளையம் ஊர்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காமக்கூர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பி. கஸ்பா பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட வந்த ஆம்பூர் அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியை சிலர் வாக்குவாதம் செய்து விரட்டியடித்துள்ளனர்.

அவரது கார் கண்ணாடியையும் அவர்கள் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் நடத்திய லேசான தடியடியில் இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு போலீசாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரவு 8 மணி அளவில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி,69மக்களவைத் தேர்தலில் 69 புள்ளி 55 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன என்றார். அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 % வாக்குகளும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 57 புள்ளி 05 % வாக்குகளும் பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.

இதே போன்று சடமன்ற இடைத் தேர்தலில் 77.62 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் அதிக பட்சமாக அரூர் தொகுதியில் 86 புள்ளி 96 % வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60 புள்ளி 87 % வாக்குகளும் பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.