மதுரை சித்திரை திருவிழா : மீனாட்சி திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கோர் பங்கேற்பு..

தமிழகத்தில் மிகப்பெரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையான சித்திரை திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ,

சித்திர திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக கோயில் வடக்கு ஆடி வீதி , மேற்கு ஆடி வீதி சந்திப்பில் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரமாண்ட திருக்கல்யாண மேடையில்

திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியதை தொடர்ந்து அருள்மிகு மீனாட்சியும் , சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருமண சபங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப் பட்டதை தொடர்ந்து , காலை 9 .50 மணிக்கு மேல் முதல் 10 .14 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனையடுத்து விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர் .

திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோவில் உள்ளேயும் , சித்திரை வீதிகளிலும் பெரிய அளவிலான எல்.இ.டி., திரைகள் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டு இருந்ததுடன் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.