கைது செய்ப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி மறுத்ததால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற அவரை, சென்னை போலீசார் இன்று திடீரென கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அவரை கொண்டு சென்றனர்.
இதனிடையே, நக்கீரன் கோபால் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபாலை சந்திப்பதற்கு இன்று காலை 11 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வருகை தந்தார்.
ஆனால், நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து வைகோ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சில பத்திரிக்கையாளர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல்.
சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன். நக்கீரன் கோபாலை சந்திக்க போலீசார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வைகோவை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்பட்டுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.