திமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் சிலை வரும் 16-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று, சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அவரிடம் அளித்தார்.
அத்துடன், சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.
இந்நிகழ்வின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கனிமொழி, எம்.பி., திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, காவிரியின் குறுக்கே, கர்நாடகா அரசு மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து சோனியா காந்தியிடமும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடமும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,
”ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் டெல்லி வந்து சோனியாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் நாங்கள் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ”ஒரே நோக்கம் கொண்ட கொள்கைகள், அர்த்தமுள்ள பல விவாதங்களையும் அதன் மூலம் பல நல்ல பலன்களையும் ஏற்படுத்தும்.
காங்கிரஸ் – திமுக கூட்டணி எப்போதும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில் உழைக்கும்” ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.