யாருக்கும் வெட்கமில்லை! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

perikarunaமெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

 

திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதைப் பல புள்ளி விவரங்களுடன் எடுத்துச் சொல்லி நினைவு படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். இது அவருக்கு புதிதல்ல.

 

annakarunaவள்ளுவர் கோட்டம் தொடங்கி, கோயம்பேடு பேருந்து நிலையம், பறக்கும் ரயில் வரை திட்டங்களைத் தொடங்கி வைத்து விட்டு, ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அதனை வேறுயாராவது திறந்து வைப்பார்கள். சில நேரங்களில் அது சிதைக்கப்படுவதும் உண்டு. வள்ளுவர் கோட்டம், சென்னை மாநகரப் பூங்காக்கள், காவிரிப்பூம்பட்டிணத்தில் அமைக்கப்பட்ட பூம்புகார் என அதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். அப்போதெல்லாம் நான்தான்… நான்தான் என்று அவர் எத்தனை கூவினாலும், சிறு எள்ளலோடு தமிழ் அறிவுலகமும், பத்திரிகைகளும், ஊடகங்களும் அதனைப் புறங்கை வீச்சில் ஒதுக்கித் தள்ளிக் கடந்து செல்வதைப் பார்க்க முடியும்.

 

மெட்ரோ ரயில் விவகாரத்திலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயிலில் பயணித்த மு.க.ஸ்டாலின், பயணி ஒருவரைத் தாக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளை உரத்த ஆலாபனையோடு ஊடகங்கள் ஊதி ஊதி ஓய்ந்தன. பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்குத் தெரியவில்லை என்று ஜெயலலிதாவோடு சேர்ந்து ஊடகங்களும், “மூத்த” பத்திரிகையாளர்களும், நடுநிலை(?!)யாளர்களும் அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டனர்.

 

karunakamaraj“ஒருவரை அறைய வேண்டும் என்றால் உள்ளங்கை வாக்கில்தான் அறைய முடியுமே தவிர, புறங்கையால் அறைய முடியுமா? ஜெயலலிதாவுக்கும் அவரை ஆதரிக்கின்ற “நடுநிலை” பத்திரிகையாளர்களுக்கும் இது கூடவா தெரியாது” என்று ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு எந்தப் பதிலுமில்லை. “ஸ்டாலின் இமேஜ்” இதில் கடுமையாக சேதமடைந்து விட்டதாக வேறு சிலர் சொல்லத் தொடங்கி விட்டனர்.

 

முன்னணி ஆங்கில தொலைக்காட்சி ஒன்று “ஸ்டாலின் குண்டாயிஸம்” என்று இந்தச் சம்பவத்தை வர்ணித்தது. வடமாநிலங்களில் அவர்கள் கண்ணுக்கு எந்த வன்முறைச் சம்பவங்களும் தெரிந்ததே இல்லை போலும். பாவம். பதைபதைத்துப் போனார்கள்.

 

திமுகவுக்கு எதிராக ஜெயலலிதாவின் பின்னணியில் இத்தனை பெரிய பரிவாரங்களும் அணிவகுத்து போர்க்கொடி தூக்குவது ஏன் என்பதும், அதன் பின்னால் பொதிந்துள்ள அரசியலும் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான்.

 

ஸ்டாலின் என்னை அறையவில்லை என்று தாக்கப்பட்டதாகக் கூறும் நபரே பேட்டி கொடுத்து அந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

என்றாலும், மெட்ரோ ரயில் திட்டம் குறித்த உண்மையான பிரச்னைகளைப் பேசுவதில் இருந்தும், கேள்வி கேட்பதில் இருந்தும் இதன் மூலம் முற்றிலுமாக திசை திருப்பியாகிவிட்டது என்றவகையில், ஜெயலலிதா ஆதரவாளர்களும், “நடுநிலை” நாயகர்களும் வெற்றியடைந்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.sivajikarunamgrjaya

 

நாளுக்குநாள் மக்கள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கும் சென்னை பெருநகரத்தின் போக்குவரத்துக்கு தற்போது தொடங்கப்பட்டிருக்கும் ஆலந்தூர் – கோயம்பேடு மெட்ரோ ரயில்பாதை எந்த வகையில் உதவும் என்பது குறித்து எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லையே? ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு 10 கிலோ மீட்டர் தொலைவுதான். அந்த வழித்தடத்தில் கிண்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தாம்பரத்தில் இருந்து வரும் பேருந்துகளும் கோயம்பேட்டுக்கு மிகக் குறைந்த இடைவெளியில் சென்று கொண்டே இருக்கின்றன. அப்படி இருக்கும் போது, கிண்டியில் இறங்கி, சுரங்கப்பாதை வழியாக சாலையைக் கடந்து, கணிசமான தொலைவு நடந்தே ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வந்து கோயம்பேடு செல்ல எத்தனை பேர் விரும்புவார்கள்? அல்லது அது எந்த அளவுக்கு அவசியமாக பயணிகளுக்குத் தோன்றும்?

 

இதுவே ஆலந்தூர், அல்லது மீனம்பாக்கத்தில் இருந்து பிராட்வே வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், விரைவில் சென்றடைய முடியும் என்ற வகையில் பயணிகளின் தேவையை நிறைவு செய்யக் கூடியதாக அதனைக் கருதலாம்.

 

இது ஒருபுறம் இருக்க, 2009ம் ஆண்டு 14,600 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2011க்குப் பிறகு நொண்டி அடித்தது ஏன்? இந்தத் தாமதத்தால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு பல மடங்கு அதிகரித்திருப்பது உண்மையா இல்லையா?

 

மெட்ரோ ரயில் குறித்த இத்தகைய கேள்விகளை எந்த பத்திரிகையும், ஊடகமும் எழுப்பியதாகத் தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய “குண்டர்” என்பதை நிறுவுவதற்காக எடுத்துக் கொண்ட முனைப்பில் 0.1 விழுக்காடு கூட, அத்திட்டம் குறித்த மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை எழுப்புவதில்  ஊடகங்கள் காட்டவில்லை. இவற்றையெல்லாம் பெரிய ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டிய அவசியமில்லை. வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்தவைதான்.IF

 

மேலே எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் நமது நடுநிலை ஊடகங்களுக்கு விடை தெரியும். ஆனாலும் அவர்கள் அதுகுறித்தெல்லாம் பேச மாட்டார்கள். அதிமுக வின் தேர்தல் அறிக்கையில் மோனோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதும், பின்னர் அது கைவிடப்பட்டதும் வெளிப்படையாக நடந்த நிகழ்வுகள்தான். ஆனாலும் அதைச் செய்தவர் ஜெயலலிதா என்பதால் யாரும் கேள்வி எழுப்பத் தயாராக இல்லை.

 

பல ஆண்டுகள் முடக்கப்பட்டு, பெயரளவுக்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு, தற்போது ஆலந்துார் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கி இருக்கிறது என்ற யதார்த்தத்தை செய்தியாகக் கூட பத்திரிகைகளோ, ஊடகங்களோ முன்வைக்கவில்லை.

 

தமிழகம் என்றில்லை, இந்தியா அளவிலேயே ஊடகங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.stalin slap

 

எனினும், தமிழகத்தைப் பொறுத்தவரை நிலைமை சற்று வேறுபட்டது. ஜெயலலிதா ஆதரவு என்பதுதான் நடுநிலை என்பதாக இங்கே பார்க்கப்படுகிறது. அவர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பத்திரிகைகளும், ஊடகங்களும் அவருக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் இருந்தால் அதனை எதிர்ப்பது இன்னும் ஊடகங்களுக்கு வசதியாகப் போய்விடும். ஏனென்றால், எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும் பண்பு திமுக தலைவர் கருணாதியிடம் இருப்பதால், துணிச்சலோடு அவரை விமர்சிக்கும் கருத்துகளை வெளியிடுவார்கள். கலைஞர் தொலைக்காட்சி தவிர (அவர்களது சொந்த நிறுவனம் என்பதால்) வேறு எந்த தொலைக்காட்சியும் திமுகவுக்கு ஆதரவாக இல்லையென்றாலும், உண்மையான கருத்துகளைக் கூட வெளியிடுவதில்லை என்பதுதானே யதார்த்தம்.

 

கருணாநிதி எதிர்ப்பு என்பது இங்கே ஒரு Political fantasy ஆக மாறி விட்டது. ஊழல் என்றால் கருணாநிதி என்பதாகவும், முறைகேடு என்றால் கருணாநிதி என்பதாகவும், மோசடி என்றால் கருணாநிதி என்பதாகவும் ஒரு அரசியல் சித்திரம் உருவாக்கப்பட்டு அது மிக கவனமாக பராமரிக்கப்பட்டும் வருகிறது. இது எம்ஜி.ஆருக்குப் பிறகோ, ஜெயலலிதாவுக்குப் பிறகோ மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. திமுக தொடங்கப்பட்ட காலத்தில் அந்த இயக்கத்திற்கு  எதிராக ஆதிக்க வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட சித்திரம், அரசியல் களத்தில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு அறிவாளுமைத் தொழில் நுட்பத் திறமையுடன் தகவமைக்கப்பட்டு மிகச் சிறப்பாக மேன்மக்களால் கையாளப்பட்டு வருகிறது.

 

அப்படி என்றால் கருணாநிதி மீது தவறுகளே இல்லையா… எந்தக் குறைகளும் அற்றவரா… என்று கேட்கலாம். நிச்சயமாக இருக்கலாம். அதனை யாரும் மறுக்க முடியாது. அதற்கான விளைவுகளையும் அவர் அவ்வப்போது அனுபவித்தும் வருகிறார்.

 

ஆனால், ஜனநாயக ஆட்சி முறையின் தொடக்க காலத்தில், மிகவும் வறுமையும், குழப்பமும், சாதி,மத வேறுபாடுகளும் மலிந்த சமூகத்தில் 70 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நடத்தியவர் என்ற முறையில் அவர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானவையே. ஆனால் 10 முதல் முப்பது ஆண்டுகள் கூட நிறைவடையாத அரசியல் வாழ்வைக் கொண்ட சில தலைவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் எத்தகையவை என்பதை அறிவு நேர்மையோடு சீர் தூக்கிப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

 

அப்படி இருந்தும் திமுக மீதும், கருணாநிதி மீதும் ஏன் இத்தனை காத்திரமான, குறைந்த பட்ச அரசியல் அறத்தைக் கூட கடைப்பிடிக்காத கடும் எதிர்ப்பை ஆதிக்க சக்திகளும், அவர்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் காட்டி வருவது ஏன்?

 

பெரியாருக்குப் பிறகு சமூகநீதி சார்ந்த அரசியல் அச்சுறுத்தலாக அவர்களது கண்ணுக்குத் தெரிபவர் கருணாநிதி மட்டும்தான். அதைத் தவிர இவர்களது எதிர்ப்பில் வேறு எத்தகைய உள்ளடக்கமோ, உறுதிப்பாடான காரணங்களோ இல்லை என்பதே உண்மை.

 

ஆதிக்க சக்திகளின் இத்தகைய சூழ்ச்சிக்கு, அறிவுலக மேதைகள் என்று தம்மைக் கூறிக் கொள்வோரும், நடுநிலையாளர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்வோரும் ஆதரவாக இருப்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அவலம்.

 

எளிய மனிதர்களுக்கும், சமூக நீதிக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான அரசியலையும், ஆளுமைகளையும் ஆதரிப்பதற்கு, இப்போதெல்லாம் யாரும் வெட்கப்படுவதில்லை.

 

Chemparithi’s article